தேர்தலில் வாக்களிப்பதற்காக கோவை, திருச்சி வழியாக ரயில் சேவை அறிவிப்பு
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டையே சுற்றி செல்லும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - கோவை இடையே தஞ்சாவூர், திண்டுக்கல் பொள்ளாச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப்ரல் 18 மற்றும் 20 தேதி சென்னையில் இருந்து கோவைக்கு ரயில் புறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பலரும் நாளை முதல் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.. நாளையும் நாளை மறுநாளும் பொதுமக்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக்க சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை, கோவை, திருச்சி, சேலம், பெங்களூர், திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், "2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 20 92 பேருந்துகளுடன் , 2 970 சிறப்பு பஸ்கள் என 2 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7154 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 2 நாட்களுக்கு 3060 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்படி சிறப்பு இயக்க தினங்களில் வருகிற 18-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு பெரும்பான்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய (நேற்றைய) நிலவரப்படி 16-ந் தேதிக்கான (இன்று) 30 ஆயிரத்து 630 முன்பதிவு இருக்கைகளில், ஆயிரத்து 22 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, 29 ஆயிரத்து 608 இருக்கைகள் காலியாக உள்ளன. இதே போன்று, 17-ந் தேதிக்கான 31 ஆயிரத்து 308 முன்பதிவு இருக்கைகளில் 6 ஆயிரத்து 475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 ஆயிரத்து 833 இருக்கைகள் காலியாக உள்ளன. எனவே, 18-ந் தேதி கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 16, 17-ந் தேதிகளில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அரசு கூறியுள்ளது.
பேருந்துகள் மட்டுமின்றி, சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் - கோவை - சென்னை எழும்பூர் வழி தஞ்சாவூர், திண்டுக்கல், பழனி , பொள்ளாச்சி வழியாக கோவை வரை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் (18, 20ம் தேதி) செனனை எழும்பூரில் இருந்து மாலை 4.25க்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு 4.53க்கு வருகிறது.. அதன்பிறகு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக கோவையை மறுநாள் காலை 8.20க்கு செல்லும்.
அதேபோல் மறுமார்க்கமாக கோவையில் வரும் வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் (19, 21 தேதி) இரவு 8.40க்கு புறப்பட்டு பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூரை மறு நாள் காலை 10.05க்கு ரயில் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை முதல் கோவை வரை மொத்தம் 24 ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்கிறது. இந்த ரயிலை பயன்படுத்தி தேர்தலில் வாக்களிக்க செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu