கர்நாடகாவில் அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல், இயற்கையான தடையாக அமைந்த காவிரி
குரங்கு காய்ச்சல் - கோப்புப்படம்
கர்நாடகத்தில் மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கும் 'கயாசனூர் வன நோய்' (KFD) எனப்படும் குரங்கு காய்ச்சல் பற்றிய அவசியமான தகவல்களை இந்தச் செய்தித்தொகுப்பு விவரிக்கின்றது.
'கயாசனூர் வன நோய்' அல்லது குரங்கு காய்ச்சல் என்பது, 'பிளாவி வைரஸ்' வகையைச் சேர்ந்த குறிப்பிட்ட வைரஸால் பரவும் தொற்று நோயாகும். இது முதன்முதலில் கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கயாசனூர் வனப்பகுதியில் அடையாளம் காணப்பட்டது. இதனாலேயே இந்த நோய்க்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டது.
பாதிக்கப்பட்ட குரங்குகள், எலிகள், அணில்கள், உண்ணிகள் போன்றவை மூலம் இது பரவுகிறது
இது குறித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் கூறுகையில்,கர்நாடக எல்லையை ஒட்டி வசிக்கும் மக்கள், கயாசனூர் வனநோய் (கே.எஃப்.டி.) அல்லது குரங்கு காய்ச்சல் குறித்து கவலைப்பட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது. இப்பகுதியை கண்காணிக்க சுகாதாரம், வனம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைகளின் பணியாளர்கள் குழுவை அமைத்துள்ளது. ஜூனோடிக் அல்லது வேறு ஏதேனும் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கான முயற்சிகளை குழு ஒருங்கிணைக்கும்.
குறிப்பாக கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களை கண்காணிக்க வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் கர்நாடகாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
இதுகுறித்துப் பேசிய சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ஜெயந்தி கூறுகையில் “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, ஆனால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒகேனக்கல், ஊத்தமலை, மருக்கோட்டை, ஆலம்பாடி மற்றும் பிற பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் உள்ள அனைவரையும் பரிசோதிக்க பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நமக்கு இயற்கையான தடை உள்ளது, மேலும் தொற்றுநோயை ஏற்படுத்தும் உண்ணிகள் தண்ணீரில் உயிர்வாழ வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்
மாவட்ட வன அலுவலர் கே.வி.அப்பலா நாயுடு கூறுகையில், ''பொதுவாக வனப்பகுதியில் குரங்கு, மான்கள் உயிரிழப்பது வழக்கம். அதற்கு குரங்கு காய்ச்சல் என்று கூற முடியாது. வனப்பகுதியில் இதுவரை தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை, குரங்குகள் மற்றும் மான்களுக்கு பிரேதப் பரிசோதனை நடத்துவோம்” என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu