இயல்பு நிலைக்கு திரும்பியது சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் தகவல்

தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா.
சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த இரண்டு, மூன்று, நான்காம் தேதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை நகரில் சாதாரண சாலைகள் முதல் முக்கிய சாலைகள் மற்றும் அனைத்து தெருக்களிலும் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. சென்னை மாநகரை விட புறநகர் பகுதிகளான பெருங்குடி, வண்டலூர், ஊரப்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் பெரும்பாலான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.
புயல் ஆந்திரா அருகே கரையை கடந்த பின்னரும் வெள்ளம் வடிய தாமதமானது. தமிழக அரசு சார்பில் தீவிர மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் பலனாக தற்போது வெள்ளம் ஓரளவு வடிய தொடங்கி உள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களும் மீட்கப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் சென்னை நகரின் பல பகுதிகளில் இன்னும் மின்சாரம் சரியாக கிடைக்கவில்லை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என கூறி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சென்னை மாநகரம் அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மக்கள் தங்கள் வழக்கமான பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர். பேருந்து போக்குவரத்து முற்றிலும் சீரடைந்து உள்ளது. பெரும்பாலான இடங்களில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. வியாசர்பாடி உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் தான் இன்னும் வழங்கப்படவில்லை. பள்ளிகளை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களை முழுமையாக சீரமைத்த பின்னர் தான் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu