வன்முறையில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை: மாணவி தரப்பு வழக்கறிஞர்
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். தொடர்ந்து போலீசாரின் வானத்திற்கு தீ வைக்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளியின் முகப்பின் மீது ஏறி நுழைவு வாயிலை உடைத்து உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர். இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பின்னர் பள்ளி வளாகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.இதனால் அந்த பகுதி கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.
சின்னசேலம் பகுதியில் நடந்த கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடந்து வரும் போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் வன்முறை வெடித்ததால் உறவினர்கள் பாதி வழியில் திரும்பிவிட்டனர். போராட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu