இனிமேல் கரன்ட் கட் ஆகாது-சொல்கிறார் மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி

இனிமேல் கரன்ட் கட் ஆகாது-சொல்கிறார் மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி
X
மின்வெட்டுக்கு மத்திய அரசுதான் காரணம். இனிமேல் கரன்ட் கட் ஆகவே ஆகாது. - சொல்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி

2 நாள் மின்வெட்டுக்கு மத்திய அரசுதான் காரணம். இனிமேல் கரன்ட் கட் ஆகவே ஆகாது.- சொல்கிறார் அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி.

மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டுக்கான மின்சாரம் தடைபட்டபோதும் தனியார் நிறுவனங்கள், மற்றும் மாநில தொகுப்பிலிருந்து மின் விநியோகிக்கப்பட்டு நிலைமையை சமாளித்ததாகவும் இனிமேல் கரன்ட் கட் ஆகவே ஆகாதுஎனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சில மாவட்டங்களில் சில மணி நேரமும், ஒரு சில இடங்களில் பல மணி நேரமும் மின்வெட்டு நீடித்தது.

கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ள நிலையில், மின் தடையால் இரவில் உறங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். அறிவிக்கப்படாத இந்த மின்வெட்டால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இது தொடர்பாக மின்வாரியத்துக்கும் புகார்கள் குவிந்தன. சமூக வலைதளங்களிலும் பலர் அரசை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் திடீர் மின் தடை குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைதள பக்கங்களில் விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.

இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது." எனக் கூறினார்.

இந்நிலையில், மத்திய அரசிடம் நிலக்கரி கையிருப்பு குறைந்துவிட்டதாகவும், 12 மாநிலங்களில் மின் தடை அபாயம் இருப்பதாகவும் ஆங்கில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையே சட்டப்பேரவையில் இன்று மின் தடை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "தனியார் நிறுவனங்களிடம் 3,000 மெகாவாட் கூடுதலான மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சியை எடுத்ததுடன், நமது சொந்த உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நகர பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் ஏற்பட்ட மின் தடையை சரி செய்துள்ளோம். மத்திய தொகுப்பிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் தடைபட்ட நிலையை கூட சமாளிக்கக்கூடிய அளவிற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு அனல் மின்நிலையங்களின் மொத்த மின் உற்பத்தி 15,553 மில்லியன் யூனிட்டாக இருந்தது. தற்போது நடைபெற்று வரும் நிதியாண்டில் இந்த உற்பத்தி 20,391 மில்லியன் யூனிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 31 விழுக்காடு சொந்த உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புனல் மின் நிலையங்கள் உற்பத்தி திறன் மத்திய அரசு நிர்ணயித்ததைவிட அதிகம்.

நிலக்கரி பற்றாக்குறை இருந்தபோதும், நாம் நிலக்கரியை இறக்குமதி செய்யாமல், உற்பத்தியை அதிகரித்துள்ளது தமிழ்நாடு அரசு. மத்திய அரசும் தமிழ்நாடு அரசுக்கு வழக்கமாக வழங்கி வந்த நிலக்கரியை விட தற்போது குறைந்த அளவிலேயே நிலக்கரி வழங்கி வருகிறது. பல மாநிலங்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல், மே மாதத்திற்கான நிலக்கரி இறக்குமதி செய்யும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்." என்றார்.

Next Story