அரசு பஸ்களில் 5 வயது வரை இலவச பயணம்! மேலும் பல சலுகைகள் அறிவிப்பு
போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர்
தமிழக சட்டசபையில் இன்று போக்குவரத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதன் இறுதியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் பதிலளித்து பேசினார். அப்போது அவர், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, அரசு பேருந்துகளில் இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம். தற்போது 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு, அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படும். விழா நாட்கள் தவிர மற்ற நாட்களில், இணையவழிப் பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை அறிமுகம் செய்யப்படும். இதற்காக, ரூ.70 கோடி செலவிடப்படும். பயண கட்டண சலுகை அனுமதி சீட்டுகளை எளிதாக அரசு போக்குவரத்து கழகங்களின் வலைதளம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ரூ.70.73 லட்சம் செலவில் சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்கி தரம் உயர்த்தப்படும். பேருந்துகளின் வருகை, புறப்பாடு குறித்த தகவல்கள் மதுரை மற்றும் கோவை நகரங்களில் மொத்தம் 16 பஸ் முனையங்களில் இணையவழி தகவல் அமைப்பு மூலமாக காட்சிப்படுத்தப்படும்.
பள்ளி வாகனங்களுக்கு முன், பின் புறங்களில் கேமராவுடன், சென்சார் கருவி பொருத்தும் வகையில் சிறப்பு விதிகள் கொண்டுவரப்படும். அரசுப் பேருந்துகளில் கேமரா பொருத்தி, மத்திய கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் பணி விரிவுப்படுத்தப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu