அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்..!
சென்னை உயர்நீதிமன்றம்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் துவக்கி வைத்து, பின்னாளில் நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா கட்டிக்காப்பாற்றிய அ.தி.மு.க கட்சி உடையும் சூழல் நிலவுகிறது. ஒற்றை தலைமை முழக்கம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில், ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்தார். மேலும், அதிமுக கட்சியின் நிரந்தர அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், முனுசாமி, தமிழ் மகன் உசேன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், ஏற்கனவே நடைபெற்ற பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் வரும் திங்கட்கிழமை (ஜூலை 4) விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்தனர். ஆனால், வரும் ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை விசாரிக்க முடியாது என கூறி, அந்த மனுவை ஏற்க திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் பொதுக்குழு கூட்டம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டமிட்டப்படி நடக்கும் என எதிர்பார்ப்பு தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது.
இதற்கிடையில், பன்னீர்செல்வம் தரப்பு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடும் எனவும் பரபரப்பு தகவல் பரவி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu