கோவை சம்பவம் குறித்த என்.ஐ.ஏ. முதல் வழக்கே இறுதி வழக்காக இருக்கட்டும்

கோவை சம்பவம் குறித்த என்.ஐ.ஏ. முதல் வழக்கே இறுதி வழக்காக இருக்கட்டும்
X
Car Blast -கோவை சம்பவம் குறித்த என்.ஐ.ஏ. முதல் வழக்கே இறுதி வழக்காக இருக்கட்டும் என தமிழக மக்கள் கூறி வருகிறார்கள்.

Car Blast -கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என். ஐ. ஏ. பதிவு செய்த முதல் வழக்கே தமிழகத்தின் இறுதி வழக்காக இருக்கட்டும்.

அமைதி பூங்கா என்று பெயர் எடுத்த தமிழகத்தில் மீண்டும் அந்த அமைதியை குலைக்கும் வகையில் தமிழகத்தின் கோவை மாநகரில் ஒரு விரும்பத் தகாத சம்பவம் நடந்திருக்கிறது. ஏற்கனவே 1988 ஆம் ஆண்டு மத ரீதியாக கோவையில் நடந்த குண்டு வெடிப்பு அதனால் பலியான மக்களின் எண்ணிக்கை, அரசாங்கம் தொடர்ந்து எடுத்த நடவடிக்கைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இன்னும் சிறை கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ளனர். 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் வடு இன்னும் கோவை மாநகர மக்களின் மனதில் இருந்து மாறவில்லை.


இந்நிலையில் தான் கடந்த 23ஆம் தேதி அதிகாலை கோவை கோட்டைமேடு உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் மீண்டும் கோவை மாநகரம் தீவிரவாதிகளின் பிடியில் சென்று விட்டதா என்று ஐயப்படும் வகையில் நடந்துள்ளது. ஆனால் இறைவன் அருளால் தீய செயலை செய்ய வேண்டும் என்று எந்த ஒரு நாசக்காரன் திட்டமிட்டானோ அவனே அந்த சம்பவத்தில் பலியானதால் கோவை மாநகர மக்கள் காப்பாற்றப்பட்டனர் என்பதே உண்மை. அதிகாலை நடந்த சம்பவம் கோவையை தாண்டி வெளி மாவட்ட வெளி மாநில, நாட்டு மக்களுக்கு தெரிய இரவு ஆகிவிட்டது. அது பற்றி கூட விமர்சனம் வந்தது ஏன் மாநில அரசு மறைக்க முயற்சித்தது என அரசியல் ஆக்கப்பட்டது.

ஆனால் தமிழக போலீசார் எடுத்த துரிதமான நடவடிக்கையின் காரணமாக முதல் கட்டமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தீவிரவாத செயலுக்கு உடந்தையாக இருந்த ஜமேசா முபின் என்ற நாசக்காரன் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டான். அவனது வீட்டில் இருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கார் சிலிண்டர் வெடிப்பு நடைபெற்ற இடத்தில் கூட குண்டு வெடித்ததற்கான தடயங்கள் ஏராளமாக காவல்துறையினரின் விசாரணைக்கு ஆதாரமாக கிடைத்துள்ளன எனவே இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி திட்டம் என்பது மட்டும் 100 சதவீதம் உண்மையாகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை கார் வெடிப்பில் மாநிலம் தாண்டிய பரிணாமங்களும் பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்பு உள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணை முற்றிலுமாக தமிழக காவல்துறையிலிருந்து என்ஐஏ பிரிவிற்கு மாற்றப்பட்டுவிட்டது.


இதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் கொச்சியில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் டி.ஐ.ஜி. வந்தனா தலைமையில் சூப்பிரெண்டு ஸ்ரீஜித் மற்றும் ஒரு குழுவினர் தமிழகம் வந்தனர். அவர்கள் முதலில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து நடந்த சம்பவங்கள் தொடர்பான ஆவணங்கள், இதுவரை நடந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அமைப்பினர் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். தேசிய புலனாய்வு முகமை அமைப்பிற்கு இதுவரை தமிழகத்தில் போலீஸ் நிலையம் கூட கிடையாது.

தீவிரவாத செயல்கள் அதிகம் நடைபெறும் வட மாநிலங்கள் மற்றும் காஷ்மீர் பகுதி ஆகியவற்றில் தான் அவை செயல்பட்டு வருகின்றன. தென் மாநிலங்களை பொறுத்தவரை கேரள மாநிலத்தில் பயங்கரவாத அமைப்புகள் அதிக அளவில் செயல்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு ஏற்கனவே கொச்சின் நகரில் போலீஸ் நிலையம் திறந்து உள்ளனர். ஆக தமிழகத்தில் தற்போது என்.ஐ.ஏ.அலுவலகம் சென்னை பகுதியில் ஒன்று திறக்கப்பட்டு அந்த காவல் நிலையத்தின் முதல் வழக்காக கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ.அதிகாரிகள் தங்களது முறைப்படி தொடங்கியுள்ளனர்.

இது தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடைக்கல்லாக தான் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பயங்கரவாத செயல்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கே கோவை வழக்காக உள்ளது. இந்த வழக்கை என்.ஐ.ஏ. புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதன் ஆதி முதல் அந்தம் வரை விசாரித்து பயங்கரவாத கும்பலின் அடிமட்ட வேர் வரை தீவிரமாக புலனாய்வு செய்து சம்பந்தப்பட்ட பயங்கரவாத தொடர்புடையவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்பதே சாதி மத இனங்களுக்கு அப்பாற்பட்ட ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

ஏனென்றால் தமிழகத்தில் மத ரீதியான பெரிய அளவினை மோதல்கள் என்றும் நடந்ததே கிடையாது. பெரியாரால் பண்படுத்தப்பட்ட திராவிட மண் என்பதால் இங்கு இஸ்லாமிய மக்களும் இந்து மக்களும் சகோதரர்களாகத்தான் பழகி வருகிறார்கள். அந்த சகோதரத்துவம் நீடிக்க வேண்டுமானால் கோவை மாநகரில் நடந்தது போன்ற சம்பவங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.அதற்கு தமிழக காவல்துறையினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும். என்.ஐ.ஏ. ஏஜென்சி பதிவு செய்துள்ள இந்த முதல் வழக்கே தமிழகத்தின் இறுதி வழக்காக இருக்க வேண்டும் என்பதே நம் மக்களின் விருப்பமாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!