புரியாத மொழியில் `ஜிகினா' வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் இராமையாதாஸ்
கவிஞர் தஞ்சை இராமையாதாஸ்
புரியாத மொழியில் `ஜிகினா' வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கு அன்றே முன்னோடியாக இருந்த கவிஞர் தஞ்சை இராமையாதாஸ் பிறந்த தினம்
தஞ்சை இராமையாதாஸ் தமிழகக் கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவும் ஆவார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். பாமரர்களும் இரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றியிருக்கிறார்.
இராமையாதாஸ் தமிழ்நாடு தஞ்சாவூர் , மானம்பூச்சாவடியில் நாராயணசாமி - பாப்பு ஆகியோருக்கு 1914 ம் ஆண்டு ஜுன் 5 ம் தேதி பிறந்தார். தஞ்சை புனித பீட்டர் பள்ளியில் படித்து பின்னர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் பெற்றார். தஞ்சாவூரிலேயே கீழவாசல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்கு தாயராம்மாள், அரங்கநாயகி என்ற இரண்டு மனைவியர். மூத்தவருக்கு விஜயராணி என்ற மகளும், மற்றவருக்கு இரவீந்திரன் என்ற மகனும் உள்ளனர்.
ஜெகந்நாத நாயுடு என்பவரின் "சுதர்சன கான சபா" என்ற நாடக நிறுவனத்தில் நாடக வாத்தியாராகச் சேர்ந்தார். பின்னர் தானே "ஜெயலட்சுமி கான சபா" என்ற நாடகக் குழுவை ஏற்படுத்தி தானே நாடகங்களை எழுதி நாடெங்கும் மேடையேற்றினார். அப்போது டி. ஆர். சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி " (1947) என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுத இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
இவரது முதல் திரைப்படப் பாடல் "வச்சேன்னா வச்சது தான் புள்ளி என்பதாகும்.இதனை அடுத்து, திகம்பர சாமியார் (1950), சிங்காரி (1951) ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். இராமையாதாசின் மச்சரேகை என்ற நாடகம் 200 நாட்களைக் கடந்து மேடைகளில் நடிக்கப்பட்டு வந்தது. நடிகர் டி. ஆர். மகாலிங்கம் அதனை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரிக்க எண்ணி அவரை 1950 -இல் சென்னைக்கு அழைத்தார்.
இதனை அடுத்து நாகி ரெட்டியின் "பாதாள பைரவி " படத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல் எழுதினார். இதனைத் தொடர்ந்து நாகி ரெட்டியின்மாயா பஜார் , மிஸ்ஸியம்மா , கடன் வாங்கி கல்யாணம், மனிதன் மாறவில்லை ஆகிய படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதினார். இவரது பகடை பன்னிரண்டு என்ற நாடகக் கதை எம்.ஜி.ஆர். நடித்த " குலேபகாவலி " என்ற திரைப்படமாகியது.
இப்படத்தில் இவர் எழுதிய சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... என்ற பாடல்கள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தன. மொத்தம் 83 படங்களில் 532 பாடல்கள் வரை இவர் எழுதியிருக்கிறார். அத்துடன் 25 படங்களுக்குக் கதை வசனமும், 10 படங்களுக்குத் திரைக்கதையும் எழுதியுள்ளார்.
இராமையாதாஸ் 1962 ஆம் ஆண்டில் "திருக்குறள் இசை அமுதம்" என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்கு முனைவர்மு. வரதராசன், எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோர் அணிந்துரை தந்திருந்தனர். அப்போதைய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். நூலை வெளியிட்டார்.
தஞ்சை இராமையாதாசின் கலைப்படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டு அவரது வாரிசுகளுக்கு ரூபாய் ஆறு இலட்சம் பணமும் வழங்கப்பட்டது.
திரைப்படக் கலைஞர்கள் வாழும் போது கொண்டாடப்படும் அளவுக்கு அவர்கள் மறைந்தபின் நடப்பதில்லை. சிலர் வாழும் போதேயும் கூட இப்படிப்பட்ட நிலை இருப்பதில்லை என்பது வேறு. அந்த வகையில் திரைப்படப்பாடல் ஆசிரியர்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், உடுமலை நாராயணகவி போன்றோருக்கு நிகராகத் தஞ்சை ராமையாதாஸ் பேசப்படுவதில்லை.
பலநேரங்களில் எந்தப் பாடல் பட்டுக் கோட்டையின் பாடல், எது தஞ்சை ராமையாதாசின் பாடல் என பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு நல்ல பல பாடல்களை எழுதி யவர் தஞ்சை ராமையாதாஸ்."எத்தனைக் காலம் தான் ஏமாற் றுவார் இந்த நாட்டிலே" (மலைக்கள்ளன்), "அநியாயம் இந்த ஆட்சி யிலே இது அநியாயம்" (குலேபகாவலி) போன்ற பாடல்கள் இன்றைக்கும் அரசியல் சாடலுக்குத் தேவைப்படுகின்றவை.
காங்கிரஸ் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தும் விதமாக திராவிட இயக்கத்தவரால் திரைப்படங்களில் இணைக்கப்பட்ட பாடல்கள். இவை இன்று திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளுக்கும் பொருந்தி நிற்பதுதான் நகைமுரண். ராமாயணத்தில் ராவணன் வில்லன் பாத்திரம் என்றாலும் திரைப்படத்தில் அதற்கு அழியாப்புகழ் கொடுத்த வரிகள்."இன்றுபோய் நாளை வாராய் என எனை ஒரு மனிதன் இயம்புவதோ"(சம்பூர்ண ராமாயணம்) சி.எஸ்.ஜெயராமனின் கம்பீரமான குரலில் சோகமும் கர்வமும் இழையோடும் இந்த வரிகளை மறக்க இயலுமா?வயது வேறுபாடின்றி சில பாடல் கள் இன்றைக்கும் கவனத்தைச் சுண்டியிழுக்கும் சக்தி பெற்றவை.
அவற்றில் ஒன்றுதான்."கல்யாண சமையல் சாதம்காய்கறிகளும் பிரமாதம்இந்த கவுரவப்பிரசாதம் இதுவே எனக்குப் போதும் ஹஹஹஹா… ஹஹஹஹா…"சிறுவர்களும் முதியவர்களும் சேர்ந்து ரசிக்கத்தக்கப் பாடலும் காட்சிகளும் மாயாபஜாரை மறக்க முடியாமல் செய்தன.
புரியாத மொழியில் `ஜிகினா' வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் "ஜாலியோ ஜிம்கானா" பாடலை எழுதியதும் இவரே.
கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த "புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே" பாடலை போடுவார்கள். "பானை பிடித்தவள் பாக்கியசாலி" படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்
.இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ். மற்றபடி அந்தப் படத்தின் கதையும் காட்சிகளும் இன்று எத்தனைபேருக்கு நினைவில் இருக்கும்? T.R.மகாலிங்கத்தின் வெண்கலக் குரலில் ஒலிக்கும் "ஆடை கட்டி வந்த நிலவோ" (அமுதவல்லி), சீர்காழி கோவிந்தராஜனும், பி.பி. ஸ்ரீநிவாசும் கலக்கும் "கண்களும் கவிபாடுதே" (அடுத்த வீட்டுப் பெண்) நினைவிலிருந்து நீங்காதவை அல்லவா? "பிருந்தாவனமும் நந்தகுமார னும் யாவருக்கும் பொது செல்வமன்றோ" (மிஸ்ஸியம்மா), "மயக் கும் மாலை பொழுதே நீ போ… போ…" (குலேபகாவலி), "அழைக்காதே நினைக்காதே அவைதனிலே எனையே நீ ராஜா" (மணாளனே மங்கையின் பாக்கியம்) போன்ற இனிய பாடல்களுக்கும்,"சொக்காபோட்ட நவாபு, செல்லாது உங்க ஜவாபு" (குலேபகாவலி), "வாங்க மச்சான் வாங்க வந்த வழிய பார்த்து போங்க" (மதுரை வீரன்) போன்ற எள்ளல் பாடல்களுக்கும் சொந்தக்காரர் தஞ்சை ராமையாதாஸ்.
தஞ்சாவூர் மாவட்டம் மானம் பூச்சாவடியில் 1914-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி நாராயணசாமி – பாப்பு அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர் அங்குள்ள சென்ஸ் பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர், கரந்தை தமிழ்க்கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.
சிறிது காலம் ஆசிரியராக வேலைபார்த்த இவரை நாடகத் துறை தான் முதலில் ஈர்த்தது. "ஜெயலட்சுமி கானசபா" என்ற நாடக குழுவை உருவாக்கி பல பகுதிகளுக்கும் சென்று நாடகம் நடத்தலானார்.ஆசிரியப் பணியைத் தொடரும்போதே நாடகத் துறையிலும் நாட்டம் ஏற்பட, ஒரு நாடகக்குழு அவரை தன் சபாவில் வாத்தியாராக ஏற்றுக்கொண்டது. நாடக கதை – வசன – பாடலாசிரியருக்கு `வாத்தியார்' என்ற பெயர் நிலைத்து விடும். இந்த வகையில் நாடகத் துறையிலும் `வாத்தியார்' ஆனார். மச்சரேகை, பகடை, பவளக்கொடி, விதியின் வெற்றி, அல்லி அர்ஜ×னா, வள்ளி திருமணம் போன்ற நாடகங்களையும் நடத்தி வந்தார்.
ஊர் ஊராக நாடகம் போட்டு வந்த அப்பாவை ராமசாமி பாவலர் என்பவர் சேலத்தில் நாடகம் போட அழைத்து வந்தார். அதே ஊரில் அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி", "ஓர் இரவு" போன்ற நாடகங்களை கே.ஆர்.ராமசாமி நடத்தி வந்தார். இரண்டு குழு நாடகங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது.
அப்பாவின் வசனமும் பாடல்களும் நாடக மேடையில் பிரபலம் என்பதால், அவரது புகழ் சினிமாத்துறையிலும் பரவ ஆரம்பித்தது. இதனால் சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது. 1947-ஆம் ஆண்டு இவரை சிறந்த கவிஞராக கண்டுகொண்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அப்போது தயாரித்து வந்த "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தது.
"வச்சேன்னா வச்சதுதான் புள்ளி" என்பதுதான் தஞ்சை ராமையா தாஸின் முதல் பாடல். அப்போது வைத்த புள்ளி வழியாக திரைத் துறையில் முக்கியப் புள்ளியானார்.'மச்சரேகை' என்ற நாடகம் இவரை சென்னைக்குக் கொண்டு வந்தது. இந்த நாடகத்தை அப்படியே திரைப்படமாக்க விரும்பிய நடிகர் ரி.ஆர்.மகாலிங்கம், ராமையா தாஸை சென்னைக்கு அழைத்தார். இது நடந்தது 1950-இல்.இதன் பிறகு மேலும் பல பட வாய்ப்புகள் தேடி வந்தன. நாகி ரெட்டியின் விஜயா வாகினி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரித்த 'பாதாள பைரவி' படத்திற்குத் திரைக்கதை, வசனம், பாடல் எழுதினார். இது புதிய பரிணாமத்தைத் தந்தது.
பின்னர் மாயாபஜார், மிஸ்ஸியம்மா, கடன் வாங்கி கல்யாணம், மனிதன் மாறவில்லை முதலிய படங்களுக்கு வசனம், பாடல் கள் எழுதினார். ராமையாதாஸின் "பகடை பன்னிரண்டு" நாடகம் தான் எம்ஜிஆர் நடித்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த 'குலேபகாவலி' திரைப் படமானது. இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே மீண்டும் மீண்டும் பாடப்பட்டன. "வில்லேந்தும் வீரர் எல்லாம் வீழ்ச்சியுற்றார் பகடை யிலே" என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
ஒரு சமயம் டைரக்டர் ஸ்ரீதர் "அமரதீபம்" படத்துக்கு பாட்டெழுதி வாங்க வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் இவர், "நம்பினா நம்புங்க! நம்பாகாட்டி போங்க" என்ற பல்லவியைச் சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், "வாத்தியாரய்யா! இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே" என்று கலக்கமாய் கூறியவர், "வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க" என்று கேட்டிருக்கிறார்.
ராமையாதாசும் உடனே தமாஷாக, "ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா" என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.
"இதுக்கு என்ன அர்த்தம்?" என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, "கதைப்படி இது குறவன் – குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்" என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு இவருக்கு "டப்பாங்குத்து பாடலாசிரியர்" என்ற பெயரும் வந்து சேர்ந்தது. ஆனால் இவர் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.
சினிமாவில் `கேட்டது கிடைக்கும்' என்பது ராமையாதாஸிடம்தான். இயக்குனர்கள் எந்த மாதிரி விரும்புகிறார்களோ, அந்த மாதிரி பாடல்களைக் கொடுப்பார். ஒருமுறை இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது "தங்கரத்தினம்" படத்துக்கு ஒரு பாட்டு கேட்டார். பல்லவியில் "உதயசூரியன்" என்ற வரி வரும்படி கேட்டுக் கொண்டார். இவரும் "எதையும் தாங்கும் மனசு, என்னை ஏமாத்தப் பாக்குது வயசு, என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு" என்று எழுதிக் கொடுத்தார்.
அந்தக் காலத்தில் `கதை, வசனம், பாடல்கள் ஒருவரே' என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் ராமையாதாஸ்தான். அதோடு நாடக உலகின் தந்தை என கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகளைத் தமிழ் மண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இவர்தான். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் `பபூன்' வேடமிட்ட சங்கரய்யரைக் கடைசி வரை ஆதரித்தார்.
பின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ் சுவாமிகளின் `ஏகலைவன்' என்றும் அழைத்துக் கொண்டார்".
தஞ்சை ராமையாதாஸ், "லலிதாங்கி" என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார். கதாநாயகனாக, எம்.ஜி.ஆர். நடித்தார். கிட்டத்தட்ட பாதி படம் தயாரான நிலையில் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட, கதாநாயகனாக சிவாஜிகணேசனை நடிக்க வைத்து "ராணி லலிதாங்கி" என்ற பெயரில் பெயரில் சிவாஜி -பானுமதியை வைத்து படத்தை எடுத்து முடித்தார். இந்தப்படத்தில்தான் அதுவரை `பிரமிளா'வாக இருந்த நடிகை "தேவிகா" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.
சினிமாவில் ராமையாதாஸ் தயாரிப்பாளரானதுதான் அவர் செய்த தவறு. "ஆளைக் கண்டு மயங்காதே" படம் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. பாட்டெழுதி சம்பாதித்து வடபழனி பேசும்படம் அலுவலகம் அருகில் பெரிய பங்களாவை வாங்கினார். தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தில் அந்த பங்களாவை விற்றுவிட்டார்."
50 ஆண்டுகாலமே வாழ்ந்து மறைந்த ராமையாதாஸ் சுமார் 83 திரைப்படங்களுக்கு 530-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். 25 படங்களுக்குக் கதை, வசனம், 10 படங்களுக்குத் திரைக் கதை என இவரது தளம் விரிவானது.கண்டசாலா, ஆதிநாராயண ராவ், கே.வி.மகாதேவன், ஜி.ராம நாதன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோரின் இசை இவரது பாடல்களை மேலும் மெருகூட்டியது.
புலவர் பட்டம் பெற்றவருக்கு இலக்கியப் பதிவு இல்லாமல் போகுமோ? 1962-ஆம் ஆண்டு "திருக்குறள் இசை அமுதம்" என்ற நூலினை எழுதி வெளியிட்டிருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்ஜிஆர் இந்த நூலை வெளியிட்டார் என்பதும் மு.வரதராசனாரும், எம்.தண்ட பாணி தேசிகரும் நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார்கள் என்ப தும் கூடுதல் சிறப்பாகும்.செவிகளுக்கு விருந்தாய் என்றும் ரீங்காரமிடும் பல பாடல்களுக்குச் சொந்தக்காரரான தஞ்சை ராமையாதாஸ் 1965 ஜனவரி 15-இல் காலமானார்.
இவருக்கு தாயராம்மாள், அரங்கநாயகி என்ற இரண்டு மனைவியர். மூத்தவருக்கு விஜயராணி என்ற மகளும், மற்றவருக்கு இரவீந்திரன் என்ற மகனும் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu