ஓ. ஹென்றி நினைவஞ்சலி
ஹென்றி நினைவஞ்சலி.
ஓ. ஹென்றி நினைவஞ்சலி
அமெரிக்காவின் டாப் சேல்சில் இருந்த பத்திரிகைகளில் ஒன்றான `தி நியூயார்க் டைம்ஸ்' 1909-ம் வருஷம் தன் ஆபீஸ் ரிப்போர்ட்டர் ஒருத்தரை அழைத்து, எழுத்தாளர் வில்லியம் சிட்னி பார்ட்டர் என்பவரை நேர்காணல் செய்யும் பணியை ஒப்படைச்சுது.
அந்த நிருபருக்கு ஆறு வாரம் கெடு வழங்கப்பட்டது. ஐந்து வாரம் கடந்தும் அந்த எழுத்தாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசி வாரத்தின் திங்கட்கிழமை அன்று, வில்லியம் சிட்னி பார்ட்டரின் புத்தகங்களின் பதிப்பாளர் வழியே அவர் தங்கியிருந்த மேடிசன் ஸ்குவேர் என்ற இடத்தைக் கண்டுபிடித்துச் சந்தித்தார் அந்த நிருபர். முதன்முறையாகச் சந்திக்கும்போது நிருபர், ``உங்களை பல நாள்களாகத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறேன்'' என்றாராம். உடனே, சிரித்துக்கொண்டே ``தெரியும்'' என்றார் சிட்னி பார்ட்டர்.
சரி, `யார் இந்த சிட்னி பார்ட்டர்? நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் எல்லாம் தேடிக் கண்டுபிடித்து நேர்காணல் செய்யும் அளவுக்கு அவ்வளவு பெரிய எழுத்தாளரா என்ன?' என்று யோசிக்கலாம். அவருடைய புனைபெயரைக் கூறினால் உங்களுக்கே தெரியும். ஆம். அமெரிக்காவே கொண்டாடிய சிறுகதை எழுத்தாளர் ஓ.ஹென்றியின் இயற்பெயர்தான் `வில்லியம் சிட்னி பார்ட்டர்'.
முறுக்கிய கறுப்பு மீசை, நம்பிக்கையும் கம்பீரமும் நிரம்பிய கண்களைப் பார்த்தாலே ராணுவ வீரரை ஞாபகப்படுத்தும் ஹென்றியின் இளம் வயது புகைப்படம். காதலும் அன்பும் நிரம்பிய கண்கள், இதயத்தின் இனிமையைப் புன்னகையாய் முன்னிறுத்தும் உதடுகள் என்று சாக்லேட் பாயை ஞாபகப்படுத்தும் ஹென்றியின் சற்று வயதேறிய புகைப்படம். இப்படி என்றும் அழகாய், புதிராய் இருந்த ஓ.ஹென்றி, 1867-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் கிரீன்ஸ்போரா என்னுமிடத்தில் பிறந்தவர்.
கல்லூரிக்குச் செல்லாத சிட்னி பார்ட்டர், தனது 15 வயதோடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார். தன் நண்பனிடம் ``இலக்கியத்துக்காக வேறு பெயர் வைக்க வேண்டும்'' என்று கூறினார். செய்தித்தாள்களை எடுத்து, பிடித்த பெயர்களைப் பார்த்துவந்த சிட்னி பார்ட்டர்க்கு `ஹென்றி' என்ற பெயர் பிடித்துப்போக, அதோடு எளிதாக எழுதப்படும் எழுத்தான O-வை இணைத்து `ஓ.ஹென்றி' என வைத்துக்கொண்டார்.
ஓர் எறும்பு சிறு சர்க்கரைத் துணுக்கைச் சுமந்து வருவதுபோல அவருடைய அடையாளத்தை இன்று வரை இந்தப் பெயர்தான் சுமந்து வந்துகொண்டிருக்கிறது டெக்ஸாஸ், நியூ ஆர்லியன்ஸ், நியூயார்க் எனப் பல பகுதிகளில் தன்னுடைய பணிக்காகக் குடியேறிய ஹென்றி, சிறந்த ஊர்சுற்றும் வாலிபரும்கூட. பல இடங்களுக்குச் செல்வதும், மக்களைச் சந்திப்பதும், அவர்களுடன் உரையாடுவதும் என வாழ்க்கையை ரசித்து வாழும் ஹென்றி,
13 வயது முதல் 19 வயது வரை அதிக புத்தகங்களை வாசித்த ஹென்றி, வாசிப்பதோடு மட்டுமல்லாமல் சிறுகதைகளை எழுதவும் ஆரம்பிக்கிறார். சிறுவயதில் கலைஞனாக வேண்டும் என எண்ணிய அவர், தனது 21 வயது வரை தான் ஒரு சிறுகதை எழுத்தாளனாக வருவேன் என எண்ணவில்லை. அவர் எழுதிய கதைகள் எல்லாமே எங்கேயோ பிரசுரமாகிக்கொண்டுதான் இருக்கும். ஒரு பத்திரிகை நிராகரித்துவிட்டால், வேறு ஸ்டாம்பு ஒட்டி வேறு இதழுக்கு அனுப்பிவிடுவாராம். அப்படி `The Emancipation of Billy' என்ற கதை `13 தடவை பிரசுரமாகாமல் திரும்பியதாம். ஆனால், ``நான் எழுதியதில் மிகச்சிறந்த கதை அது'' என்கிறார் ஹென்றி.
ஜான்சி மற்றும் சூய் ஆகிய இருவரும் வாஷிங்டனில் வசித்துவரும் நண்பர்கள். அது, நிமோனியா என்னும் நோய் பரவிக்கொண்டிருந்த காலம். அந்த நோயால் ஜான்சி பாதிக்கப்பட்டிருந்தாள். அவள் ஜன்னல் வழியே தெரியும் மரத்தின் இலைகள் ஒவ்வொன்றாக உதிர, `கடைசி இலை உதிரும்போது நானும் இறந்துவிடுவேன்' என எண்ணினாள். நம்பிக்கை இழந்த ஜான்சிக்குப் பலர் ஆறுதல் கூறியும், அதை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசி இலை மட்டுமே மரத்தில் மீதி. இந்தச் செய்தியை அறிந்த கீழ் வீட்டில் இருக்கும் பெர்ஹ்மன் என்கிற ஓவியர், இரவு முழுவதும் பனியில் நனைந்தபடி உயிருள்ள இலை ஒன்றை வரைந்து அதில் ஒட்டுவார். மறுநாள் காலை ஜான்சி அதைப் பார்த்து உற்சாகம் பெற, நோயும் குணமாகிவிடும். ஆனால், பெர்ஹ்மன் இறந்துவிடுவார். `அந்த இலைதான் அவர் வரைந்த மாஸ்டர் பீஸ்' என்று கதை முடியும். `THE LAST LEAF' சிறுகதைதான் இது. ஹென்றியின் ஆகச்சிறந்த சிறுகதைகளுள் இதுவும் ஒன்று.
பள்ளியில் மோட்டிவேஷன் கதையாகச் சொல்லித்தரப்பட்ட இந்தக் கதை, அதையும் தாண்டி உணர்ச்சிகரமான கதை இன்றைக்கும் வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது.
ரொமான்டிக் மைண்ட் உள்ள ஓ.ஹென்றி, காதலர்களுக்கிடையில் இருந்த மிகச்சிறந்த காதலையும் எழுதியிருக்கிறார். `THE GIFT OF THE MAGI' என்ற கதையில் வரும் டெல்லாவும் ஜிம்மும் ஏழைக் கணவன்-மனைவி. கிறிஸ்துமஸ் விழாவுக்குத் தங்களுடைய துணைவருக்குப் பரிசு வழங்க வேண்டும் என்று முடிவெடுப்பார்கள். ஜிம் தன்னுடைய கோல்டு வாட்சை விற்று டெல்லாவின் அழகிய நீண்ட முடிக்கு அலங்காரச் சீப்புகளை வாங்கிவருவார். டெல்லா தன்னுடைய அழகிய நீண்ட முடிகளை விற்று ஜிம்மின் வாட்சுக்கு பிளாட்டினம் செயின் வாங்குவார். இருவரும் சர்ப்பிரைஸ் அளிக்க நினைத்து ஏமாந்து நிற்கும் அந்த நொடியின் உச்சபட்ச காதலின் எடையை இப்போதும் எவராலும் தாங்க முடியாது
இந்தக் கதைகள் மட்டுமல்ல, `THE RANSOME OF RED CHIEF', `THE COP AND THE ANTHEM' என்று மிகப் புகழ்பெற்ற கதைகள் உட்பட 350-க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியுள்ளார். பல கதைகள் எழுதியிருக்கும் ஓ.ஹென்றிக்கு Burton's `Anatomy of Melancholy' and Lane's `Arabian Nights' ஆகிய புத்தகங்கள்தாம் மிகவும் பிடித்தவை. தனக்குப் பிடித்த கதைகளை மட்டும் எழுதும், எழுதியதைத் திருப்பிப் படிக்காத ஓ.ஹென்றி தன்னைப் பற்றிச் சொல்வதையோ எழுதுவதையோ கடைசிவரை விரும்பவில்லை. தன்னுடைய வாழ்வில் அவர் அளித்த ஒரே பேட்டி மேற்கூறிய பேட்டி மட்டும்தான். அந்தப் பேட்டியில்கூட `என்னைப் பற்றிக் கேட்பதைவிட ஷேக்ஸ்பியரைப் பற்றிக் கேளுங்கள்' என்றுதான் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu