காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் பிறந்த நாளின்று:💐
காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் பிறந்த நாளின்று:💐
காயிதே மில்லத் அனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். தனது உயர்ந்த பண்பின் காரணமாக அமைந்த பெயராலேயே இறுதிவரை அழைக்கப்பட்ட தலைவர் 'காயிதே மில்லத்'. முகமது இஸ்மாயில் என்பதுதான் அவரது இயற்பெயர். ஆனால், தன்னலமற்ற, தூய்மையான அரசியல் நடவடிக்கைகளால், 'காயிதே மில்லத்' என்றே அழைக்கப்பட்டார். உருது மொழியில், 'வழிகாட்டும் தலைவர்' என்று இதற்குப் பொருள்.
அடிப்படை நேர்மை என்ற பண்புதான் அவரது அனைத்து நற்பண்புகளுக்கும் அடித்தளமாக அமைந்தது. இன்று முஸ்லிம்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தி னராவது அடிப்படைக் கல்வி முடித்து உயர் கல்வி பெறுகிறார்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணம் காயிதே மில்லத்.
அந்நாளில் இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.
1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார்.
1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.
நாடெங்கும் உருவான முஸ்லிம் கல்லூரிகளின் பின்னணி...
1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருந்தார். அப்போது, சென்னை அண்ணா சாலையில் கன்னிமரா ஹோட்டல் எதிரே இருந்த முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமான முகமதியன் கல்லூரியைக் கையகப்படுத்திய அரசு, அதை அரசுப் பெண்கள் கல்லூரியாக மாற்ற முடிவுசெய்தது. இதை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமாக இருக்கும் ஒரே ஒரு கல்லூரியையும் அரசு கையகப்படுத்துவதால் முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதினார்.
அப்போதைய உள்துறை அமைச்சர் டாக்டர் சுப்பராயனைச் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தினார், காயிதே மில்லத். அப்போது அமைச்சர் சுப்பராயன், 'ஒரு கல்லூரிக்காகப் போராடுவதில் காட்டும் உழைப்பை, முஸ்லிம் சமூகத்துக்காக உங்கள் சமூகத்தில் உள்ள செல்வந்தர்களிடம் பேசி தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கல்லூரிகளைத் தொடங்குவதில் நீங்கள் ஆர்வம் காட்டினால் அதிக பலன் கிடைக்குமே' என்று யோசனை தெரிவித்தார்.
இந்த யோசனையில் இருக்கும் நன்மையைப் புரிந்துகொண்ட காயிதே மில்லத், உடனடியாகத் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் மிகப் பெரும் செல்வந்தர்களைச் சந்தித்து, 'முஸ்லிம் சமூகத்துக்கென்று கல்லூரிகள் தொடங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அவரது வேண்டுகோளைப் பல செல்வந்தர்கள் ஏற்றுக்கொண்டனர். தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியாரைச் சந்தித்து, தனது இந்தத் திட்டம் பற்றி விளக்கி அனுமதி பெற்றார்.
இதைத் தொடர்ந்தே, சென்னையில் புதுக் கல்லூரி, திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி, அதிராம்பட்டினத்தில் காதர் மொய்தீன் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்திலிருந்து சென்று சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற வெளிநாடுகளில் தொழில்செய்து வந்த முஸ்லிம் தனவந்தர்களிடம், கல்லூரிகளின் கட்டிட வசதிக்காக நிதி கோரினார். அவரது வேண்டுகோளை உத்தரவாக மதித்து அவர்கள் தாராளமாக நிதி வழங்கினர். ஒட்டுமொத்த நிதியையும் வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் கல்லூரிகளின் கட்டிடங்களுக்காக செலவிட்டார். இன்றும் புதுக் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரிகளில் பர்மா- மலாய் வாழ் முஸ்லிம் பெயர்கள் கட்டிடங்களுக்குச் சூட்டப்பட்டிருப்பதே இதற்கு சாட்சி.
அன்னாரின் பிறந்த தினமின்று
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu