சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறலாமா? காவல்துறை உயரதிகாரிகள் எங்கே?-சமூக போராளிகள் கேள்வி
சிங்கார சென்னையில் மட்டும் ஊரடங்கு விதிகளை மீறி வாகனப் போக்குவரத்தின் இரைச்சல்கள் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருக்கின்றன களத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளை காணவே இல்லை என சமூக போராளிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவித்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகிறது. சென்னை நீங்கலாக மாநிலம் முழுவதும் இருசக்கர வாகனம் உள்பட அனைத்து விதமான வாகனங்களின் போக்குவரத்தும் முழுமையாக இல்லாவிட்டாலும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், சிங்கார சென்னையில் மட்டும் வாகனப் போக்குவரத்தின் இரைச்சல்கள் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
மாநகர போக்குவரத்து காவல்துறையினர் பல பகுதிகளில் தடுப்புகளை அமைத்து வாகனங்களை கண்காணித்து வந்தாலும், மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறிக் கொண்டு இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து எல்லா சாலைகளிலும் வழக்கம் போல இயங்கிக் கொண்டே இருக்கின்றன.
கடந்த நான்கு நாட்களாக இரவு, பகல் பாராமல் பணிபுரிந்து வரும் காவலர்கள், எவ்வளவு கடுமை காட்டினாலும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி வாகன ஓட்டுனர்கள், வாகனங்களை இயக்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்.
தினமும் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் தமிழத்தில் இத்தனை பேருக்கு கொரோனா. தலைநகராம் சென்னையில் இத்தனை பேருக்கு என வந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் இதே போல ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, சென்னையில் உள்ள அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் விதி மீறல்கள் நடந்தது. அது ஏன்? அப்போதும் மட்டும் எப்படி நிகழ்ந்தது அந்த அதிசயம். பெரிதாக எல்லாம் கட்சி ரீதியாக சிந்திக்கவேண்டாம்.. அந்த கால கட்டத்தில் காவல்துறை உயரதிகாரிகள் களத்தில் இறங்கி நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். கீழ்நிலையில் உள்ள காவல் அதிகாரிகளும் கடுமையாக பணியாற்றினர், கடந்தாண்டும் இதே காலக்கட்டத்தில் வாகனப் போக்குவரத்து முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.
அந்த காலகட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், ஊரடங்கு காலத்தில் சென்னை மாநகர் முழுவதும் பம்பரம் போல சுற்றி வந்து கண்காணிப்பை பலப்படுத்தினார். அவர் சாலைகளில் ஆய்வு செய்ய இறங்கியதால், அவரின் கீழ் பணியாற்றிய கூடுதல் ஆணையர், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் என ஒட்டுமொத்த காவல் துறை உயரதிகாரிகளே சாலைகளில் ஊரடங்கு கால விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தினார்கள். ஆணையர் ரோட்டிற்கு வந்ததால், கூடுதல் ஆணையரும் ஆய்வுக்காக களத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒட்டுமொத்த காவல்துறையே சாலைகளில் ரோந்து பணிகளை மேற்கொண்டதால், அவர்களுக்கு கீழே பணியாற்றும் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் என அனைவரும் உற்சாகத்தோடு பணியாற்றினார்கள்.
அன்றைய சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பகல்,இரவு என எந்தநேரமும் ரோந்து பணியில் இருந்த காவல் அதிகாரிகளைச் தேடிச் சென்று அவர்களின் பணியை பாராட்டியதுடன், தொடர் பணியில் தொய்வு ஏற்படாமல் இருக்க, காவல் அதிகாரிகளுக்கு குளிர்பானம், பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கி உற்சாகப்படுத்தினார்.மேலும், 55 வயதுக்கு மேற்பட்ட காவல் அலுவலர்கள், காவலர்கள் கொரோனோ தடுப்பு பணியை மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரவும் பிறப்பித்தார். கண்காணிப்பு பணியில் கண்டிப்பு காட்டியதால், அண்ணா நகர் துணை ஆணையர் முத்துசாமி உள்ளிட்ட ஒரு சில அதிகாரிகளே கொரோனோ தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது.
தொடர் பணியால் கொரோனோ தொற்றுக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு பிரத்யேகமாக கிண்டி பொறியியல் கல்லூரியில் சிறப்பு சிகிச்சை மையத்தை ஏற்படுத்தி, அங்கு காவல்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சிறப்பு சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார் மேலும்,காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை உற்சாகப்படுத்தி மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பான முகக்கவசம் உள்ளிட்டவற்றை தயாரித்தும் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்தார்.
அவர் பணிமாறுதல் பெற்ற பிறகு காவல் ஆணையர் பொறுப்பு ஏற்ற மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ்.ஸும், முந்தைய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உருவாக்கிவிட்டுச் சென்ற பாதையிலேயே சிறப்பாக செயல்பட்டார் என கூறலாம். காவல்துறையினருக்கு மிக நெருக்கமான அதிகாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, ரோந்து பணிகளில் ஆர்வம் காட்டி சென்னை மாநகரை முழுவதுமாக சுற்றி வந்தார். பணியில் இருக்கும் போது பிறந்தநாள் வந்தால், அவர்களுக்கு விடுமுறை அளிக்கும் திட்டத்தையும் அமல்படுத்தினார். காவலர் குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில் தனியாத ஆர்வம் காட்டினார்.
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காவல்நிலையத்திற்குச் சென்று அங்கு பணிபுரியும் காவலர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.அவரது பணிக்காலத்தில்தான் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அப்போது கொரோனோ தொற்று அச்சம் இருந்தபோதும், தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட காவலர்களுக்கு முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகளை தாராளமாக வழங்கியதுடன், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு தேவையான குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கி உற்சாகப்படுத்தினார்
இப்படியாக சிங்கார சென்னை மாநகர காவல்துறையின் முன்னாள் ஆணையர்கள் ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ்.ஸும், மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ்.ஸும் கொரோனோ காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் களத்தில் ஒருவராக நின்று, தங்கள் துறையின் கீழ்நிலை அலுவலர்களுக்கு தைரியத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து வழிநடத்தினார்கள். ஆனால், தற்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ், முதல் மற்றும் இரண்டாம் தடவையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலங்களில் எந்த இடத்திலும் ஆய்வு மேற்கொண்டதாக ஒரு புகைப்படமும் ஊடகங்களில் வெளியாகவில்லை என்பது வருத்தமான விஷயம்.
அவரே களத்திற்கு வராததால், அவரின் கீழ் பணியாற்றும் கூடுதல் ஆணையர், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் என எந்தவொரு அதிகாரியும் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்களை ஆய்வு செய்ததாகவோ, இரவு நேரங்களில் சென்னை மாநகரில் ஆய்வு மேற்கொண்டதாகவோ ஒரு புகைப்படமும் வெளியாகவில்லை. இத்தனைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட நள்ளிரவில் கொரோனோ ஒருங்கிணைப்பு மையத்தில் ஆய்வு நடத்தி போனில் உரையாடியது குறிப்பிடத்தக்கது.மேலும் தனது தொகுதியான கொளத்தூரில் பல்வேறு ஆய்வு திட்டங்களை நடத்துகிறார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இப்படி முதலமைச்சரே நேரடியாக களத்தில்இறங்கி, மருத்துவமனைகளை ஆய்வு செய்கிறார், நிவாரணநிதி தரும் நன்கொடையாளர்களை சந்திக்கிறார். உயரதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி 24 மணிநேரமும் செம பிஸியாக இருக்கிறார்.
ஆனால், சென்னையில் ஊரடங்கு முழுமையான வெற்றி பெற வேண்டும் என்றால் வாகனப் போக்குவரத்து கட்டுக்குள் வர வேண்டும். இத்தகைய தலையாய பணியை மேற்பார்வையிட வேண்டிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தனது அலுவலகத்தின் எட்டாவது மாடியில் இருந்தே வெளியே எங்கேயும் தலையைக் காட்டுவதில்லை என காவல்துறை வட்டாரங்கள் தகவல்.மேலும் தன்னை சந்திக்க வரும் பார்வையாளர்களையும் சந்திப்பது இல்லை. களத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க தயாராக இருக்கும் தன்னார்வலர்களை கூட சந்திக்க மறுக்கிறார் என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் குறிப்பாக தலைநகர் சென்னை மாநகரம் கொரோனா தொற்று பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் களத்திற்கு வர வேண்டிய சென்னை காவல்துறை ஆணையர் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக போராளிகள்...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu