இந்த மாவட்டங்களில் ஆசிரியா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மாறுதல் கிடையாது
பள்ளி கல்வித்துறை அலுவலகம் - கோப்புப்படம்
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்குமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், இவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியா்களை பணியமா்த்தும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் குமரகுருபரன், பள்ளிக் கல்வி இயக்குநருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், 757 பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தற்போது வழிவகையில்லை. காலிப் பணியிடம் அதிகம் உள்ள மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட வேண்டும்.
தற்போது, 2,000 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டதில், தோ்வாகும் பட்டதாரி ஆசிரியா்களை காலிப்பணியிடம் அதிகம் உள்ள கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும்.
இந்த மாவட்டங்களில் தோ்வா்களை முதலில் நியமனம் செய்யும் போதே குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இந்த மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமனம் செய்ய வேண்டும்.
அத்துடன் மேற்கண்ட அறிவுறுத்தல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவற்றை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் கடந்த பல ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் அதிக அளவு காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu