சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா: யார் இவர்?
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பணியாற்றி வந்த நிலையில், மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள S.V.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முன்னதாக பரிந்துரை செய்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த மே 24 ஆம் தேதி, 8 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா பணி ஒய்வு பெற்றார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதி S.V.கங்காபூர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
யார் இந்த கங்காபூர்வாலா?
1962 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி பிறந்தவர் சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா. சட்டப்படிப்பை முடித்த இவர், 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். விசாரணை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், கடன் மீட்புத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, பாம்பே மெர்கண்ட்டைல் கூட்டுறவு வங்கி, ஜல்கான் ஜனதா சககாரி வங்கி போன்ற நிதி நிறுவனங்களுக்கும், பல கார்ப்பரேட் அமைப்புகளுக்கும், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கும் வழக்கறிஞராக இருந்துள்ளார்.
பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் வழக்கறிஞராக பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மனே ஆணையம் முன்பு, அரசு தரப்பில் ஆஜராகி நீதிமன்றத்தில் வாதிட்டார்.
சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழும் கங்காபூர்வாலா, சட்டப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியிலும், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியிலும் பங்கேற்றுள்ளார். சட்டக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், கடந்தாண்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கங்காபூர்வாலா, அடுத்த ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu