புதிய தொழில் நிறுவனமா? ரூ.10 லட்சம் ஆதார நிதி.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

புதிய தொழில் நிறுவனமா? ரூ.10 லட்சம் ஆதார நிதி.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
X
தமிழ்நாடு புத்தாக்க நிறுவனங்களுக்கான ஆரம்ப கட்ட ஆதார நிதிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு புத்தாக்க நிறுவனங்களுக்கான ஆரம்ப கட்ட ஆதார நிதி (TANSEED) பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (TANSIM) செறிவார்ந்த முன்னெடுப்புகளில் ஒன்று தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்பகட்ட ஆதார நிதி வழங்கும் திட்டம் (TANSEED) ஆகும்.

தமிழகம் உலகளாவிய அளவில் முதலீட்டு ஈர்ப்பு மையமாகவும், புத்தொழில்கள் தொடங்குவதற்கு ஏற்ற களமாகவும் இருக்க வேண்டும் என்பதனை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க செயலகம் (TANSIM) இந்நோக்கத்திற்கு பயனளிக்கும் வகையில், தமிழகத்தில் தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களை தகுதி வாய்ந்த நடுவர் குழு வழியே தேர்வு செய்து, ஆரம்ப கட்ட ஆதார நிதியாக (Tamilnadu startup seed grant fund)" 10 லட்சம் ரூபாய் வழங்குகிறது.

இராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள தாமரைக்குளம் என்னும் மீனவ கிராமத்தினை சேர்ந்தவர் மோகன். இவர் Ippo Pay என்ற பெயரில் நிதிசார் தொழில்நுட்ப புத்தொழில் (FINTECH) நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இவரது Ippo Pay நிறுவனம் இந்த ஆண்டு US $ 2.1 மில்லியன் தொகையினை முதலீடாக பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது. ஏற்கனவே TANSEED - திட்டத்தின் வாயிலாக 10 லட்சம் ரூபாயினை ஆதார மானிய நிதியாகப் பெற்ற நிறுவனங்களில் திரு.மோகனின் Ippo Pay நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக, மூன்றாவது முறை புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆதார மானிய நிதி வழங்குதலுக்கான அறிவிப்பை, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனம் மகிழ்வுடன் வெளியிடுகின்றது. கடந்த சுற்றில் முறையாக 19 புத்தொழில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் வீதம் உதவித் தொகை முதலமைச்சரால் கடந்த 23.12.2021 அன்று வழங்கப்பட்டது.

இந்த நிதி தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் வளர்ச்சியை நோக்கி முன்னெடுக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

TANSEED - 3.0 எனப்படும் 3வது பதிப்பிற்கான விண்ணப்பங்கள், TANSIM- ன் இணையதளமான www.startuptn.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள, பதிவு செய்ய விரும்பும் நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வரும் மார்ச் 11ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்வு செயல்முறைகளை பற்றி அறிந்து கொள்ள www.startuptn.in இணையதளத்தினை பார்வையிடவும். ஏதேனும் கேள்விகள் இருப்பின் support@startup.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!