நீட் தேர்வு விலக்கு : குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பு : சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்
நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக, ஆளுநர் அலுவலகத்திலிருந்து செய்தி தெரிவிக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் ஆற்றிய உரையாவது:
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.
இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை ஆளுநர் அவர்கள் மறுபரிசீலனை செய்யுமாறு கோரியதும், அதுகுறித்து அனைத்துச் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதித்து, சில தினங்களுக்குள்ளாகவே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் அனுப்பி வைத்தோம்.
இதுதொடர்பாக ஆளுநரை நான் நேரில் சந்தித்து, மேலும் தாமதமின்றி இந்தச் சட்டமுன்வடிவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும், பிரதமர் அவர்களையும், உள்துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்து இந்தச் சட்டமுன்வடிவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தினேன். அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து குடியரசுத் தலைவர் அவர்களது அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்கள்.
இந்தத் தொடர் முயற்சிகளின் பயனாக, ஒரு வரலாற்று நிகழ்வாக, நாம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்டமுன்வடிவினை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள் என்ற தகவலை ஆளுநர் அவர்களின் செயலர் அவர்கள் சில மணித்துளிகளுக்கு முன்பாக என்னிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்தச் சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை வைக்கிறேன். என்று முதல்வர் கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu