நயன்தாரா, விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம்: விதிமீறல் இல்லை
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக கூறப்பட்டதும் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வாடகைத் தாய் மூலம் யாரும் நினைத்தவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அந்த விதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உண்டு. மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரத்தில், இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கடந்த 13-ம் தேதி உயர்மட்ட விசாரணை குழு அமைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரிய வந்தது.
அதில் இத்தம்பதியர்கள் வயது மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன செயற்கை கருத்தரிப்பு மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு தொழில்நுட்பம் நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவனிற்கு பதிவு திருமணம் 11.03.2016 இல் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மையை பதிவு துறை உறுதி செய்துள்ளது. தனியார் மருத்துவமனையில் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது, 2020-ல் அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார்.
குடும்ப மருத்துவரின் முகவரியில் சென்று விசாரணை செய்தபோது, அவர் இடமாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது. அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது அத்தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை. மேலதிக விசாரணையில் அந்த மருத்துவர் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிய வருவதால் குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சினைமுட்டை சிகிச்சை சம்மந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் 2020 சினைமுட்டை மற்றும் விந்தனு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு, நவம்பர் 2021 மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. மார்ச் 2022-ல் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு அக்டோபர் மாதம் குழந்தைகள் பிரசவம் ஆனதாக தெரிய வருகிறது.
செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்திற்கு முந்தைய ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி, உறவினர் அல்லாதோர் வாடகைத்தாயாக செயல்படவும், அவருக்கு அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது.
விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் 09.10.2022 அன்று நயன்தாரா விக்னேஷ் சிவனிடம்அளிக்கப்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu