நக்சலைட்டுகளுக்காக நடத்தப்பட்ட 10 என்கவுன்டர்கள்- வால்டர் தேவாரம் (பகுதி-6)

நக்சலைட்டுகளுக்காக நடத்தப்பட்ட 10 என்கவுன்டர்கள்- வால்டர் தேவாரம் (பகுதி-6)
X

வால்டர் தேவாரம்.

நக்சலைட்டுகளுக்காக நடத்தப்பட்ட 10 என்கவுன்டர்கள் பற்றி வால்டர் தேவாரம் இன்றைய பகுதி-6 தொகுப்பில் கூறி உள்ளார்.

வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ். வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக இருந்தபோது, தமிழகத்தில் நக்சல்கள் ஊடுருவியது எப்படி அதனை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் பற்றி அளித்த பேட்டியை பகுதி ஐந்தில் பார்த்தோம். இன்று பகுதி 6-ல் நக்சலைட்டுகளுக்காக நடத்தப்பட்ட என்கவுண்டர்கள் பற்றி விவரிக்கிறார் வால்டர் தேவாரம் .அது என்ன என்பதை அறிய தொடர்ந்து படிக்கலாம்.

போலீஸ் ஆய்வாளர் கொலை

அன்றைய வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் செல்வந்தர்களை தாக்கி கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த நக்சல் பாரிகள் இறுதியாக போலீஸாருக்கு எதிராகவும் தங்களது தாக்குதல்களை அதிகப்படுத்தி வந்தனர். இதனால் அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவது என முடிவு செய்யப்பட்டது. போலீசாருக்கும் நச்சல்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்தது உண்டு .ஒரு முறை நக்சல்பாரி இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிலரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது வெடிகுண்டு வீசி ஒரு காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமானது. கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மகளான அஜந்தா என்பவர் பெயரில் அஜந்தா நடவடிக்கை குழு என ஒரு தனி படை உருவாக்கப்பட்டது. அப்போது வேலூர் சரக டி.ஐ.ஜி.ஆக இருந்த தேவாரம் தலைமையில் இந்த படையினர் நக்சல்கள் ஒழிப்பில் தீவிரமாக இறங்கினார்கள்.

10 என்கவுன்டர்கள்

தனது தலைமையில் அமைக்கப்பட்டிருந்த தனி படையினரால் 10 நக்சலைட்டுகள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறுகிறார் வால்டர் தேவாரம். நக்சல்கள் ஒழிப்பு பணியில் தனக்கு மிகவும் உதவியாக இருந்த அசோக் குமார் என்ற சப் இன்ஸ்பெக்டர் கிராமங்களுக்குள் தைரியமாக சென்று நக்சல் பாரிகள் என இருந்தவர்களை தனியாக அடையாளம் கண்டு அவர்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டினர் என நினைவு கூர்ந்து உள்ளார் தேவாரம். நக்சல்கள் பிரச்சினை பல ஆண்டுகள் அந்த பகுதியில் நீடித்து வந்தாலும் தேவாரம் தலைமை ஏற்ற பின்னர் இரண்டு ஆண்டுகளில் நக்சல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டார்கள். இதற்காக வால்டர் தேவாரத்திற்கு வீர தீர செயலுக்கான விருது வழங்கப்பட்டது.

எதிர் பிரச்சாரம்

அந்த காலகட்டத்தில் நக்சல்கள் ஒழிக்கப்படவில்லை என்றால் மேற்கு வங்காளம் ,சத்தீஸ்கர் மாநிலங்களை போன்று இன்று வரை நக்சல்கள் பிரச்சினை பெரிய தலைவலியாக இருந்து இருந்திருக்கும். ஆனால் அன்று இருந்த போலீஸ் அதிகாரிகள் எடுத்த உறுதியான நடவடிக்கை, ஆட்சியாளர்கள் அதற்கு அளித்த ஒத்துழைப்பு காரணமாக தமிழகத்தில் நக்சல்கள் பிரச்சனைக்கு அப்பொழுதே முடிவு கட்டப்பட்டு விட்டது. நக்சல்கள் ஒழிப்பு என்ற பெயரில் அப்பாவி இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர்களுக்கு எதிராக அந்த காலகட்டத்தில் ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு விடுதலைப்படை

ஆனாலும் நக்சலைட்டுகளிடம் இருந்து பயிற்சி பெற்று தமிழ்நாடு விடுதலைப் படை என்ற பெயரில் இயங்கி வந்த தமிழரசன் மற்றும் அவரது குழுவினர் அரியலூர் ஜெயங்கொண்டம் மீன்சுருட்டி பகுதிகளில் முந்திரி காடுகளில் பதுங்கி இருந்து கொண்டு நச்சல்கள் செய்த காரியத்தை தொடர்ந்து செய்து வந்தார்கள்.வங்கி கொள்ளை செல்வந்தர்களை தாக்கி பணம் கொள்ளை அடிப்பது போன்றவற்றில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி ஸ்டேட் வங்கியில் கொள்ளையடித்து விட்டு தப்பி தப்பி செல்ல முயன்ற போது தமிழரசன் பொதுமக்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அந்த இயக்கமும் வீழ்ச்சியை சந்தித்தது.

நாளை என்ன?

நக்சல் பாரிகள் இயக்கத்திற்கு முடிவு கட்டிய பின்னர் தேவாரம் ஐ. பி. எஸ். க்கு சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை பிடிக்கும் பணி வழங்கப்பட்டது. வீரப்பனை பிடிக்கும் பணியில் அவரது வீர தீர சாகசங்கள் அவனது பலத்தை குறைத்தது எப்படி என்பது பற்றி தேவாரம் அளித்த பேட்டியை நாளை பார்க்கலாம் (இன்னும் வரும்).

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!