புதுச்சத்திரம் அருகே 100% மானியத்தில் கிணறுகள் அமைக்க மத்திய அமைச்சர் அடிக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 3 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறுகள் அமைக்கும் பணிகளை மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்துள்ள பெரியதொட்டிப்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், 3 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறுகள் அமைக்கும் பணிகளை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர். எல். முருகன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்கள் நலத் திட்டங்களின் பயன்கள் நேரடியாக அவர்களுக்கு சென்று சேர்வதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்றார்.
விவசாயிகளின் நலனைக் காக்க பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தை செயல்படுத்தி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஊரகப்பகுதிகளில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்பட்டு வருகிறது என்றும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக கழிப்பறையும் கட்டித் தரப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ அரிசியை வழங்கி உணவு பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu