மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல்: அறை கண்காணிப்பாளர்கள் மாற்றம்
மைக்ரோ பிட் பேப்பர்
பிளஸ்-2 தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 200 பள்ளிகளில் இருந்து 9 ஆயிரத்து 729 மாணவர்கள், 10 ஆயிரத்து 138 மாணவிகள், 472 தனித்தேர்வர்கள் என மொத்தமாக 20 ஆயிரத்து 339 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதி வருகின்றனர். 82 மையங்களில் இத்தேர்வு நடைபெற்று வருகிறது.
தேர்வை கண்காணிக்க அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் தலைமையில் 120 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஒவ்வொரு மையமாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி பிளஸ்-2 கணித தேர்வின்போது பறக்கும் படையினர் அதிரடியாக கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் உள்ள அரசுபள்ளி தேர்வு மையங்களில் தேர்வு தொடங்கும் முன்பே மாணவ, மாணவிகளை அழைத்து பிட் பேப்பர் இருந்தால் கொடுத்துவிடும் படி எச்சரித்தனர்.
இதையடுத்து மாணவ, மாணவிகள் தங்களிடம் இருந்த 'மைக்ரோ' ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். 3 மையங்களிலும் சேர்த்து சுமார் 1 கிலோவுக்கு மேல் 'மைக்ரோ' ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே சில மையங்களில் மாணவ, மாணவிகள் 'மைக்ரோ' ஜெராக்ஸ் பிட் பேப்பரை பார்த்து தேர்வு எழுதுவது தெரியவந்து இருப்பதால், அதை தடுக்க தேர்வுத்துறை இணை இயக்குனர் உத்தரவுப்படி குறிப்பிட்ட மையங்களில் அறை கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
கொல்லிமலையில் உள்ள 2 அரசு பள்ளிகளில் தேர்வு மையங்கள் செயல்படுகிறது. இங்கு முன்னதாக தேர்வு பணிக்கு ஆசிரியைகள் செல்ல மறுத்து விட்டனர். ஆனால் தற்போது மாணவிகள் பிட் அடிப்பது தெரியவந்து உள்ளதால், அந்த மையத்துக்கு 4 ஆசிரியைகள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்ட குமாரபாளையம், பள்ளிபாளையம் அரசு பள்ளி தேர்வு மையங்களிலும், மாணவிகளை சோதனை செய்யும் வகையில் அறை கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
மேலும் தேர்வு மையங்களை கண்காணிக்க கூடுதலாக பறக்கும்படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை பிளஸ்-2 இயற்பியல் தேர்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu