Nalli vallal images: கொடை கேட்டு வந்தோர்க்கு அள்ளி வழங்கியவர் நள்ளி

Nalli vallal images: கொடை கேட்டு வந்தோர்க்கு அள்ளி வழங்கியவர் நள்ளி
X
Nalli vallal images: கொடை கேட்டு வந்தோர்க்கு அள்ளி வழங்கியவர் நள்ளி வள்ளலின் நட்பு குறித்து பார்ப்போம்.

Nalli vallal images: நள்ளி, கொடை கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாமல் அள்ளி வழங்கியவர். இவர் வேறு யாரிடமும் சென்று கொடை கேட்காத அளவிற்கு கொடை அளித்தார். நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம். அதிக மலைகள் கொண்ட கண்டீர நாட்டினர் இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் அழைத்தனர்.


நள்ளி என்பானும் கடையெழு வள்ளல்களின் வரிசையில் ஒருவனாகத் திகழவல்லவன். இவனைக் கண்டீரக் கோப்பெருநள்ளி எனவும், கண்டிற்கோப் பெருநற்கிள்ளி எனவும், கண்டிரக்கோன், கண்டிரக்கோ எனவும், நள்ளி யெனவும் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர். இவன் தோட்டி என்னும் மலைக்கும் அதனைச் சார்ந்த மலை நாட்டிற்கும் காடுகளுக்கும் தலைவனாக இருந்தவன். இவன் வன்பரணர், பெருந்தலைச் சாத்தனார் என்னும் பெரும் புலவர்களால் பாடப்பட்ட பெருமை சான்றவன். இவன் “இயல்வது கரவேல்” என்பதற்கு இணங்கத் தன்னை விரும்பி வந்தவர்கட்கெல்லாம் இல்லறத்தை இனிது நடத்தப் பொருள்களை ஈந்து மகிழ்ந்தவன். அப்படிக் கொடுக்குங் காலத்தும் "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்," என்பதற் கிணங்க யாதொரு தட்டுத் தடங்கல் இன்றி அளித்து வந்தவன்; நல்ல தோற்றப் பொலிவும் உடையவன். தாள்தோய் தடக்கையூடையவன். இவன் இத்தகைய நல்லோன் ஆதலின், இவன் மலையும் நல்ல மழை வளங்கொண்டு விளங்க, அத்தோட்டி மலைக்குத் தலைவனாக இருந்தவன். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் மழை பெய்யும் அல்லவா?


மாரி இடையறாது பொழிந்தால் அன்றோ தானம் தவம் இரண்டும் நிலவுலகில் தங்கும் வானம் வழங்காது எனில் இவ்விரண்டும் தங்காவே. ஆகவே இவன் மழை வளம் தரும் தோட்டி மலையில் மாண்புடன் வாழ்ந்து வந்தனன். இதனைச் சிறுபாணாற்றுப் படை ஆசிரியர் வெகு அழகுபட,

"கரவாது நாட்டோர் உவப்பநடைப் பரிகாரம்

முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்

துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு

நளிமலை நாடன் நள்ளி ”

என்று பாடிக் களித்துள்ளனர்.


நள்ளியின் நட்பு குறித்து புலவர் பாடுகையில்

"உச்சிக்கண்ணிருந்து ஒலியுடன் ஒழுகும் அருவியையுடைய உயர்ந்த தோட்டி மலையையுடைய நள்ளி! உன் செல்வத்தை வாழ்த்தி வந்தனம். நின் செல்வம் எம்போலும் புலவர்களால் வாழ்த்தி வளர்தற்குரிய பெருமை வாய்ந்தது. ஏனெனில் அச்செல்வம் நின் தளர்ச்சியில்லாத வலிய முயற்சியால் ஆயது. அது தாள் ஆற்றித் தந்த பொருள். ஆகவே, அஃது என் போலியரால் நச்சப்படும் தன்மையுடையது. அச்செல்வத்தை நீயே துய்க்க எண்ணங்கொள்ளாமல், பரிசிலர்க்கும் ஈந்துவிடுகின்றாய். அந்தப் பண்புக்கு ஏற்ப எனக்கும் அளவுகடந்து அளித்து விட்டாய். இப்படி நீ அளித்தமையால் என்னுடைய நாக்கு, ஈத்து உவக்கும் இன்பமும் பெருமையும் படைக்காத அரசரை நச்சிப் புகழும் செயலை மறந்தது. நின்னையே பாடும் பண்பாடு பெற்றது”

என்று பாடியுள்ளார்.


இதனால் பிற மன்னர்கள் தாமே துய்க்கும் குணம் படைத்தவர் என்பதையும், இவன் தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகை என்பதையும் நன்கு உய்த்து உணர்ந்து கொள்க. மேலும் இக்கண்டீரக் கோப்பெரு நள்ளி வரையாது அளித்த வண்மை காரணமாக இவனிடம் பரிசில் பெற்ற பாணர்கள் மாலை வேளையில் வாசித்தற்குரிய செவ்வழிப் பண்ணை வாசிக்க மறந்தனர் என்பதும், காலைப் பொழுதின்கண் வாசித்தற்குரிய மருதப் பண்ணை வாசிக்க மறந்தனர் என்பதும் இப்புலவர் பெருமானால் குறிப்பிட்டுப் பேசப்படுவதை உற்று நோக்கினால், நள்ளி மகிழ்ச்சியால் தம்மையே மறக்கும். அளவுக்கு ஈயவல்லவன் என்பது தெளிய வேண்டி இருக்கிறது.

Tags

Next Story
ஆப்பிள் பிரியர்களுக்கான  புதிய  அறிமுகம்..! பழைய விலைக்கே அப்கிரேட்டட் மேக்புக் ஏர் எம்2, எம்3 மாடல்கள்..மிஸ் பண்ணிடாதீங்க!..