இறந்தவர் சடலத்தை கைப்பற்றுவதில் இழுபறி -உறவினர்கள் மறியல்

நாகப்பட்டினம் அருகே ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இளைஞர் உயிரிழந்தார். மூன்று மணி நேரமாக சடலத்தை கைப்பற்ற நடவடிக்கை எடுக்காத ரயில்வே காவல்துறையை கண்டித்து நள்ளிரவில் சரக்கு ரயிலை மறித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை அடுத்துள்ள நாகூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கமல்ராஜ் (30). இவர் நாகூர் வெட்டாறு ரயில்வே பாலம் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இரவு 9 மணிக்கு நிகழ்விடத்திற்கு சென்ற உறவினர்கள் கமல்ராஜின் முகம், கை உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீசார் எல்லை பிரச்சனையை காரணம் காட்டி யார் சடலத்தை கைப்பற்றுவது என சுமார் 3 மணி நேரம் அலைக்கழித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கமல்ராஜ் உறவினர்கள் காரைக்காலில் இருந்து வந்த சரக்கு ரயிலை நள்ளிரவில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கமல்ராஜ் மரணம் விபத்தா? கொலையா? என பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்த வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் தங்கள் எல்லை இல்லை என அங்கிருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ரயில்வே போலீசார் கிளம்பி சென்றதால், தமிழக போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story