நாகை அருகே வட மாநில தொழிலாளர்களை தாக்கி ரூ.6 லட்சம் பணம் கொள்ளை
நாகை அருகே கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்கள்.
நாகையை அடுத்த தெத்தி கிழக்குக் கடற்கரைச் சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மத்திய பிரதேச மாநிலம் மன்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கி பிளாஸ்டிக் நாற்காலிகள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் சேர் விற்பனை செய்துவரும் ஈஸ்வர் பஞ்சாரா 40 நபர்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல தொழில் முடித்து வந்த வடமாநிலத்தவர்கள் 40 பேர் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 15 பேர் கொண்ட மர்ம கும்பல் வட மாநிலத்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்து பணத்தை தர மறுத்த அவர்களை சராமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட கும்பல் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகளை அடித்து நொறுக்கியதோடு, கத்தி முனையில் அங்கிருந்த 6 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து, இரண்டு லோடு வாகனங்களை நொறுக்கி, 6 செல்போன்களை திருடி தப்பி சென்றனர்.
நாற்காலிகள் முழுவதும் நாசமானதால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கிறோம் என்று கூறியுள்ள அவர்கள், அடித்து நொறுக்கப்பட்ட நாற்காலிகளின் மதிப்பு இரண்டரை லட்சம் ரூபாய் என்று தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறோம், ஒரு சேர் விற்றால் 30 ரூபாய் கிடைக்கும் என்றும், தற்போது சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நிற்கிறோம் எனவும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து 15 பேர் கொண்ட கும்பலை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வடமாநில தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீண்ட நாள் நோட்டமிட்டு உள்ளூரை சேர்ந்த கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். நாகை அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதியில் நள்ளிரவில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu