மூன்று மாவட்ட மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை
சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவ பிரதிநிதிகளிடம் உறுதியளித்ததை தொடர்ந்து, மூன்று மாவட்ட மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்.வேலை நிறுத்தத்தை கைவிட்டு, நாகை மயிலாடுதுறை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
நாகை மாவட்டம் பூம்புகாரில் தடையை மீறி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க சென்றன மீனவர்களுக்கும், அதனை தடுக்க சென்ற மற்றொரு தரப்பு மீனவர்களுக்குமிடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டு அது கலவரமாக வெடித்தது. இதனால் நாகை மயிலாடுதுறை காரைக்கால் மாவட்டங்களில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
இந்நிலையில் சுருக்கு மடி வலைகளை அடியோடு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாகை மயிலாடுதுறை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 14ஆம் தேதி முதல் தொழில் மறியல் செய்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து மூன்று மாவட்ட மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவ பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.
இதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நாகை மயிலாடுதுறை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இதனுடைய தடையை மீறி சுருக்கு மடி வலைகளை பயன்படுத்திய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நாகை மாவட்டத்தில் உள்ள சுருக்கு மடி வலைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என இன்று நாகை மாவட்ட மீனவர்கள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu