நாகப்பட்டினத்தில் மாஸ்க் அணியாமல் மது போதையில் வந்த ஆசாமி, போலீசாரிடம் வம்பு

நாகப்பட்டினத்தில் மாஸ்க் அணியாமல் மது போதையில் வந்த ஆசாமி, போலீசாரிடம் வம்பு
X
நாகப்பட்டினத்தில் போதையில் வந்த ஆசாமி, பணியில் இருந்த போலீசாரிடம் வம்பு செய்தார்.
நாகப்பட்டினத்தில் மாஸ்க் அணியாமல் மது போதையில் வந்த ஆசாமி ஒருவர், போலீசாரை பணி செய்யவிடாமல் வம்பு செய்தார்.

நாகையில் மாஸ்க் போடாமல் வந்த மது போதை ஆசாமி, காவலரை பணி செய்ய விடாமல் வம்புக்கு இழுத்து அலப்பரை செய்தார்.

நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் வெளியே வருவதை கண்காணிக்க போலீசார் பல்வேறு பகுதிகளிலும் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கவிவர்மன் உள்ளிட்ட போலீசார் வருவாய் நாகை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அவ்வழியே வரும் வாகனங்கள் மற்றும் பொது மக்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது மாஸ்க் அணியாமல் வந்த ஒருவரை நிறுத்தி ஏன் மாஸ்க் அணிய வில்லை. மாஸ்க் அணிய வில்லை என்றால் தொற்று பரவ வாய்ப்பு ஏற்படும் அல்லவா? என காவலர் கவிவர்மனை பார்த்து கேள்வி எழுப்பினார்.

அப்போது மது போதையில் இருந்த அந்த நபர் மருத்துவமனைக்கு அவசரமாக தான் செல்வதாகவும் தனது உறவினருக்கு உடல் நிலை சரி இல்லை என்றும் பொய் காரணம் கூறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

இதையடுத்து அவரின் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது தரையில் அமர்ந்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட போதை ஆசாமி காவலரை கண்டபடி ஒருமையில் கெட்டவார்த்தையால் திட்டி தீர்த்தார்.

இதனிடையே செய்தியாளர்கள் படம் பிடிப்பதை அறிந்த போதை ஆசாமி போதை தெளிந்தது போல் முகத்தை மாற்றிக்கொண்டு காவலர் தன்னிடம் லஞ்சம் கேட்பதாக கூறி அலப்பறையில் ஈடுபட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் போலிசார், போதை ஆசாமியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போதையை தெளிய வைத்து அவரை (கவனித்து) வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

சமீபத்தில் சொகுசு காரில் வந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் காவலரை ஒருமையில் பேசி சர்ச்சை எழுந்த நிலையில் நாகையில் போதை ஆசாமி ஒருவர் காவலர்களை கண்டபடி வசை பாடிய சம்பவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!