"நாகை- 30 விழா" நாகையில் இன்று வெகு விமரிசையாக தொடக்கம்
நாகை மாவட்டம் உருவாகி முப்பதாண்டு ஆவதையொட்டி புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த நாகப்பட்டினம் பிரிக்கப்பட்டு அம்மாவட்டம் உருவாகி 30 ஆண்டுகள் ஆகின்றன. நாகப்பட்டினம் மாவட்டம் 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் விதமாக "நாகை- 30 விழா" நாகையில் இன்று வெகு விமர்சையாக துவங்கியது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியினை தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேம்பு .மா, பலா, இலுப்பை நாவல், பாரிஜாதம், உள்ளிட்ட மரக்கன்றுகளை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏ கே எஸ் விஜயன், செல்வராசு ஆகியோர் நட்டு வைத்தனர்.
பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் மீன்வளத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த வண்ண மீன்கள் உலர் கருவாடு கண்காட்சியினையும் பார்வையிட்டனர். இதில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியில், கோடியக்கரை பறவைகள் மற்றும் வனவிலங்கு சரணாலயம், நாகை மீன்பிடி துறைமுகம், உம்பளச்சேரி காளை ஆகியவையின் சிறப்புகள் குறித்தும் இடம்பெற்றிருந்தன.
இதைப்போல் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் காளான் வளர்ப்பு, வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட சீரக சம்பா மாப்பிள்ளை சம்பா கருத்தகாரு ஆத்தூர் கிச்சடி சம்பா உள்ளிட்ட நெல் வகைகளும் இடம் பெற்றிருந்தன.
நாகை மண்ணின் 30 ஆண்டுகளின் நினைவுகளை பறைசாற்றிய அரங்குகளை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவில், பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஓவியப்போட்டிகள், கட்டுரைப்போட்டி, பட்டிமன்றம் உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu