65 ஆண்டுகள் மேடைகளில் பாடி சாதனை படைத்த நாகூர் ஹனிபா காலமான தினமின்று
குரல்வளத்தால் தமிழ்ச் சமூகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த நாகூர் ஹனிபா காலமான தினமின்று
'உடன்பிறப்பே! கழக உடன்பிறப்பே! அண்ணாவின் வழியில் அயராது உழைக்கும், பொன்னான கலைஞர் கண்ணாக மதிக்கும் உடன்பிறப்பே!' என்ற பாடல் தி.மு.க. கூட்டங்களில் ஒலிக்கத் தொடங்கியவுடன், கரை வேட்டியுடனும் தோளில் கறுப்பு சிவப்புத் துண்டுடனும் உற்சாகமாகத் தொண்டர்கள் ஓடிவரும் காட்சியைக் காணாத தமிழ்நாட்டுத் தெருக்கள் கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களை ஊக்கப்படுத்தி ஏழு தசாப்தங்களாக ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த சிம்மக்குரலுக்குச் சொந்தக்காரர் 'இசை முரசு' நாகூர் ஹனிபா. 'அழைக்கின்றார் அண்ணா', 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி' போன்ற தி.மு.க-வின் பிரசாரப் பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தவர் நாகூர் ஹனிபா. ஆனால், அவரை தி.மு.க. பிரசார பாடகர் என்று சுருக்கிவிட முடியாது.
65 ஆண்டுகள் தொடர்ந்து பல மேடைகளில் பாடி சாதனை படைத்தவர் ஹனிபா. நாகூர் ஹனிபா என்றால் பலருக்கும் நினைவுக்கு வரும் பாடல் – 'இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை' என்பதுதான். மிக எளிமையான நடையில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் சாதி, மதம் கடந்து அனைவராலும் பாடப்படுகிறது.
விட்டல்தாஸ் மகராஜ், மதுரை ஆதீனம் முதலான மதக் குருக்களும் இந்தப் பாடலைப் பொதுவெளியில் பாடி ஹனிபாவின் மத நல்லிணக்கப் பணியை வெளிபடுத்தியிருக்கின்றனர். இஸ்லாமியப் பாடல்களும் இயக்கப் பாடல்களும் மட்டுமல்லாமல், திரைத்துறையிலும் பாடியவர் ஹனிபா. 1961-ஆம் ஆண்டு, 'பாவமன்னிப்பு' திரைப்படத்தில், டி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்து 'எல்லோரும் கொண்டாடுவோம்' என்ற பாடலைப் பாடினார். 1992-ஆம் 'செம்பருத்தி' திரைப்படத்தில், இளையராஜா இசையில், 'நட்ட நடு கடல் மீது' என்ற பாடலும், 1997-ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த 'ராமன் அப்துல்லா' திரைப்படத்தில், 'உன் மதமா... என் மதமா? ஆண்டவன் என்ன மதம்?' என்ற பாடலும் மிகவும் புகழ்பெற்றவை.
தன் குரல்வளத்தால் தமிழ்ச் சமூகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த நாகூர் ஹனிபா 2015-ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 8-ஆம் தேதி 89-ஆவது வயதில் மரணமடைந்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu