லஞ்ச ஒழிப்பு சோதனை, ரூ. 3 லட்சத்து 73 ஆயிரம் பறிமுதல்

நாகப்பட்டினம் அருகே தமிழக அரசின் கறவை மாடுகள் வழங்கியதில் மாட்டுக்கு பயனாளிகளிடம் தலா 7500 ரூபாய் வசூல் செய்தது தெரிய வந்துள்ளது. இதில் ரூ. 3 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா கறவைப் பசு வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.37 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் விலையில்லா பசு வழங்கப்பட்டது. அதில் கால்நடை பராமரிப்பு துறையின் அலுவலர்களுக்கு தலா ரூ.7500 வீதம் பயனாளிகளிடம் இருந்து வசூல் செய்யப்படுவதாக நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் மருங்கூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் சொக்கலிங்கத்திடம் இருந்து ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் , கால்நடை மருத்துவர் முத்துக்குமரனிடம் இருந்து ரூ.48 ஆயிரம், மருங்கூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பிரான்சிஸ் மகேந்திரனிடம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மருங்கூர் ஊராட்சி செயலாளர் பிரகாஷ்குமாரிடம் 25 ஆயிரம் ரூபாய் என 3 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணதை கைப்பற்றினர்.மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபாலன் (பொறுப்பு) தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் குமார், அருள்பிரியா மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

Tags

Next Story