ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்

ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்
X

மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து, தப்படித்து, ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தினர்.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. போராட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளூர், நாகை, திருமருகல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது மத்திய அரசிற்கு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அழுகிய பயிர்களை கையில் வைத்து, தப்படித்தும் ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தாரை தப்பட்டைகள் அடித்து விவசாயிகள் பேரணியாக வருகை தந்தனர். அவர்களை ஆட்சியர் அலுவலகம் முன்பு தடுப்புகள் அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகம் முழுவதும் டிஎஸ்பி முருகவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. புயல் வெள்ளம் மட்டுமின்றி சமீபத்தில் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ள, நாகை விவசாயிகள் விரைந்து நிவாரணம் வழங்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்