மதிப்பூட்டிய மீன் உணவு பொருட்களை வணிகப்படுத்தும் திட்டம்.. மீன்வளப் பல்கலைக்கழகம் ஏற்பாடு…
கண்காட்சியை மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் பார்வையிட்டார்.
நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மீன்பதனத் தொழில் முனைவோருக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் பல்வேறு மதிப்பூட்டிய மீன் உணவுகளை அவர்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மூலம் தயாரித்துள்ளனர்.
அந்த தொழில்நுட்பங்களை பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் ஸ்டீபன் சம்பத்குமார் அவர்கள் தொழில்முனைவோர்களுக்கு பல்கலைக்கழகம் வழங்கும் சேவைகளை எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுகுமார் கூட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும், தொழில்முனைவோருக்கான மீன்பதனத் தொழில்நுட்பங்கள் குறித்தும், வெற்றிகரமான தொழில் முனைவோராகுவதற்கு வழிமுறைகள் குறித்தும் அவர் விளக்கினார்.
30 வகையான மதிப்பூட்டிய மீன் உணவு வகைகள் மற்றும் மூன்று மீன்பதனக் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன. கூட்டத்தில் தூத்துக்குடி, பொன்னேரி மற்றும் தலைஞாயிறு மீன்வளக் கல்லூரியின் மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பத் துறை தலைவர்கள், மாதவரம் மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மீன்வளப் பொறியியல் கல்லூரியின் மீன் பதப்படுத்தும் பொறியியல் துறை பேராசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது, மீன்வளப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உருவாக்கிய மீன் உணவுப் பொருட்கள் குறித்தும், மீன் பதன உபகரணங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மீன் பதப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் குறித்த செயல்விளக்கமும் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமானது மதிப்பூட்டிய மீன் உணவு தயாரிப்பில் அதிகமான தொழில் முனைவோரை உருவாக்குவது, பல்வேறு வகையான மீன் சார்ந்த உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு கொண்டு செல்வது மற்றும் ஓராண்டில் தனிநபர் உட்கொள்ளும் மீனின் அளவை அதிகரித்தல் போன்றவையாகும் என துணைவேந்தர் சுகுமார் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தலைஞாயிறு டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பொறுப்பு முதல்வர் பாலசுந்தரி, நாகப்பட்டினம் மீன்வளப் பொறியியல் கல்லூரியின் முதல்வர் பொறுப்பு முதல்வர் மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மதிப்பூட்டிய மீன் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 63 நபர்கள் கலந்து கொண்டு. பயனடைந்தனர். மேலும், நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், தமிழ்நாடு ஊரக மறுமலர்ச்சித் திட்ட அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், விவசாய உற்பத்தி சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu