நாகை, காரைக்காலை சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

நாகை, காரைக்காலை சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
X

நாகை கடற்கரையில் மீனவர்கள் கூடி நின்றனர்.

நாகை, காரைக்காலை சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்வம், ஆறுமுகம், மணிகண்டன் உள்ளிட்ட 12 மீனவர்களும், காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 9 மீனவர்கள் என 21 மீனவர்கள் கடந்த 29 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் கோடியக்கரை தென் கிழக்கே இரண்டு படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களை 9 படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதனால், நடுக்கடலில் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 21 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து மயிலட்டி துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றுமுதல் பருத்தித்துறை, சுப்பர் மடம் பகுதியைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த 2 விசைப்படகையும், 21 மீனவர்களையும் கைது செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 56 மீனவர்கள் இன்னும் தாயகம் திரும்பாத நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யபட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாகை மீனவர்கள், ஒன்றிய அரசும், தமிழக அரசும் மீனவர்களின் படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!