2 மாதங்களுக்கு பிறகு நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்பட்டது
கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டு தளங்களை இன்றுமுதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட்டது.
இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்கா திறக்கப்பட்டதை தொடர்ந்து காலை முதலே பக்தர்கள் வர தொடங்கினர். தர்கா வருகை தந்த பக்தர்களுக்கு தெர்மல் பரிசோதனை, முக கவசம் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
இதேபோல உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் காலை 6 மணிக்கு தொடங்கிய சிறப்பு திருப்பலியில் கொரோனா பேரிடரில் இருந்து நாட்டுமக்கள் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. பேராலயம் திறக்கப்பட்ட முதல் நாளே நாகை மட்டுமின்றி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தந்தனர். கொரோனா பரவல் காரணமாக ஆலயத்தின் வெளியே சமூக இடைவெளியுடன் நாற்காலிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் திருப்பலியில் பங்கேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு இருந்தது. மேலும், ஆலயத்தின் முகப்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், பேராலயத்தில் உள்ளே அமர்ந்து பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டு வழிபாடு நடத்திய உடனேயே வெளியேற்றப்படுகின்றனர். மேலும், வேளாங்கண்ணி வருகின்ற பக்தர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ள பேராலய பங்கு தந்தை, பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு பிறகு மாதாவை தரிசித்தது மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அளிப்பதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu