நாகை அரசு மருத்துவ கல்லூரியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
நாகை அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை தமிழக சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
நாகை அருகே ஒரத்தூரில் ரூ.366.35 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கடந்த மாதம் அதனை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை அங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதைதொடர்ந்து நாகை அரசு மருத்துவக்கல்லூயில் படிப்பதற்காக அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாணவர் மணீஸ்குமாருக்கு மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார்.
இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் அலை ஏறும்போது எல்லோரும் பயம், அச்சம் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். அலை சற்று குறைந்த பிறகு மக்கள் அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை. தமிழகத்தில் இதுவரை 9.67 கோடி தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு 36.46 லட்சம் முதல் தவணையாக தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்து இதுவரை 26 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 80 சதவீதம் ஆகும். இரண்டாம் தவணையாக 5.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 16.34 சதவீதம் ஆகும். அதே போல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 5.25 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 90.78 சதவீதம் ஆகும். இரண்டாம் தவணையாக 4 கோடியே 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 70 சதவீதம் ஆகும்.
2ம் தவணை தடுப்பூசி ஒருகோடி பேர் போடவில்லை. இது குறித்து கேட்டால் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துவிட்டது என கூறுகிறார்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் விதிகளை மீறியதாக 60 லட்சம் பேருக்கு ரூ.110 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை நான் பெருமையாக சொல்லவில்லை. வேதனையுடன் சொல்கிறேன். சுகாதாரம் நம்மை தேடி வரக்கூடாது. சுகாதாரத்தை நாம் தான் தேடி செல்ல வேண்டும். டாக்டர்களோ, செவிலியர்களோ நம்மை தேடி வரும் நிலையை மாறினால்தான் ஒட்டு மொத்தமாக இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் சுகாதாரம் மாறும். அந்த மனப்பான்மையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu