நாகை மாவட்டத்தில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணிகள் இன்று முதல் தொடக்கம்
நாகை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணிகள் துவக்கம்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் நாகை மாவட்டம் இடம்பெற்று இருப்பதால், தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர நாகை மாவட்டம் முழுவதும் இரண்டு லட்சம் வீடுகளில் சுமார் 7 லட்சம் மக்களுக்கு வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணிகளை 760 குழுக்கள் இன்றுமுதல் தொடங்கியுள்ளனர்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சியில் வீடுவீடாக சென்று பரிசோதனை செய்யும் பணிகளை கூடுதல் ஆட்சியர் பிரசாந்த் இன்று தொடங்கி வைத்தார். வீடு வீடாக சென்ற அவர்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு உடல் வெப்பநிலையை தெர்மல் கருவி கொண்டு சோதித்து, பல்ஸ் ஆக்சிஜன் கருவி கொண்டு ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து காய்ச்சல், சளி, இருமல் என லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு பேரசிட்டாமல், ஜிங், வைட்டமின் சி ஆகிய மாத்திரைகளை வழங்கிய பரிசோதனை குழுவினர், ஆக்சிஜன் அளவு 90க்கும் குறைவாக இருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினார்.
இன்று முதல் கணக்கெடுப்பு பணிகள் மாவட்டம் முழுவதும் தொடங்கப்பட்டு 5 நாட்கள் நடைபெறும் என்று தெரிவித்த கூடுதல் ஆட்சியர் பிரசாந்த், வீட்டிற்கு பரிசோதனைக்கு வரும் களப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் பொதுமக்கள் தாமாக மருத்துவமனை சிகிச்சைக்கு முன்வரவேண்டும் எனவும் கூடுதல் ஆட்சியர் பிரசாந்த் வேண்டுகோள் விடுத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu