நாகை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நாகை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்.
நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மட்டுமின்றி சம்பா, தாளடி செய்திருந்த விவசாய நிலப்பரப்பிலும் மழை நீர் தேங்கியது. இதனால் மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் சம்பா தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு நாகை மாவட்டம் அருந்தவபுலம் பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இந்நிலையில் இன்று நாகை வருகை தந்திருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். முதலாவதாக கருங்கண்ணி கிராமத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு மழை நீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்களை நேரில் பார்வையிட்டார். அப்போது விவசாயிகளை சந்தித்து பேசிய முதல்வர், விவசாயி வீரமணியிடம் நெற்பயிர்கள் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து அருந்தவபுலம் கிராமத்திற்கு வந்த தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மழை நீரில் சேதமடைந்த நெற்பயிர்களின் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை, அரிசி, உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், கனமழை காரணமாக வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் ஆணையினை வழங்கினார்.
முன்னதாக நாகை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக எல்லையான வாஞ்சூர் பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவர் கெளதமன் தலைமையில் தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வரின் ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மெய்யநாதன், எம்.பி.க்கள் செல்வராசு, டி.ஆர்.பாலு, ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, ஷாநவாஸ், நிவேதா முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu