நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 25 கிலோ எடை கொண்ட கத்தாழை மீன்

நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 25 கிலோ எடை கொண்ட  கத்தாழை மீன்
X

மீனவர் வலையில் சிக்கிய 25,கிலோ எடையுள்ள கத்தாழை மீன். 

25 கிலோ எடை கொண்ட அந்த கத்தாழை மீன் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இவை வலைகளில் சிக்குவது, பேரதிர்ஷ்டம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். நேற்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய ஜீவா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு வலையில், மருத்துவ குணம் வாய்ந்ததும், தங்கத்தை போல் விலை மதிக்க கூடியதுமான கூறல் மீன் எனப்படும் கத்தாழை மீன் ஒன்று சிக்கியது. தகவல் அறிந்த வியாபாரிகள், காலையில் இருந்தே கத்தாழை மீனை வாங்க, நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். 25 கிலோ எடை கொண்ட அந்த கத்தாழை மீன், ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

இது குறித்து மீனவர்கள் கூறும்போது, கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்த வகையான கற்றாழை மீன்கள் கிடைக்கும். மீனவர்கள் வலையில் அரிதாக சிக்கும். இது சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுண்டு. இந்த வகை கத்தாழை மீன்களுக்கு செவில் சுவாசத்தோடு, மீன்களின் அடி வயிற்றில் நெட்டி என்ற காற்றுப்பை இருக்கும். ஒரு மீனில் 50 கிராம் முதல் 100 கிராம் வரை இந்த நெட்டி இருக்கும்.

இந்த நெட்டி மூலம், மீன்கள் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலியை எழுப்பும் தன்மை கொண்டதாகும். மேலும் இந்த நெட்டியானது ஒயின் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. ஆண்மை தன்மைக்கு அருமருந்தாகவும் உள்ளது. மீன் இறைச்சி கிலோ ரூ. 500-க்கு விற்றாலும், அதில் இருக்கும் நெட்டிக்குதான் விலை அதிகம். எனவே இந்த வகையான மீன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவை வலைகளில் சிக்குவது, பேரதிர்ஷ்டம் என்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!