மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகப்பட்டினம் மீனவர்கள் மீது கத்திமுனையில் நடுக்கடலில் இலங்கை கடற் கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் தூண்டில் கம்பிகளை உடலில் மாட்டி இழுத்து சித்திரவதை செய்ததாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடந்த 21 ஆம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் கோடியக்கரைக்கு தென் கிழக்கே 13 நாட்டில்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரண்டு அதிவேக படகுகளில் வந்த 15 இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நாகை மீனவர்கள் கழுத்தில் கத்தியை வைத்து படகுகளில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அதனை தடுத்த செருதூர் மீனவர்களை கூர்மையான தூண்டில் கம்பிகளை மீனவர்கள் உடலில் மாட்டி சித்திரவதை செய்து அவர்களை தாக்கி தண்ணீரில் தள்ளினர். இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோன செருதூர் மீனவர்கள் சுமார் ஒரு மணி நேரம் கடலில் தத்தளித்தனர். இதையடுத்து படகில் இருந்த வலை, வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ் கருவி மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர். தொடர்ந்து அவ்வழியே வந்த நாகையை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலில் தத்தளித்த செருதூர் மீனவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு ஆளான கண்ணன், முருகன் உள்ளிட்ட 6 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த கண்ணன், முருகன் நாகை மற்றும் வேளாங்கண்ணி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு வெள்ளப்பள்ளம் மீனவர்களும், தற்போது செருதூர் கிராம மீனவர்களும் தொடர்ந்து தாக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu