தலித் குடும்பங்கள் வெளியே வரமுடியாமல் அடைத்து வைப்பு !
நாகப்பட்டினம் அருகே குடிநீர் குழாய் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்த 7 தலித் குடும்பங்கள் வெளியே வரமுடியாத வகையில் கம்பி வேலி கொண்டு அடைக்கப்பட்டுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மடப்புரம் ஊராட்சி கோவில்பத்து தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் வசிக்கும் கள்ளத்திடல் பகுதிக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த வாரம் வாழக்கரையில் இருந்து குடிநீர் குழாய் பதித்து பணியை தொடங்கினர். இந்நிலையில் கோவில்பத்து தெரு அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்கு அதே பகுதியை சேர்ந்த சபாநாதன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ரமேஷ் தரப்பிற்கும், சபாநாதன் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டு ரமேஷ் மீது திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்த சபாநாதன் கள்ளத்திடல் பகுதியில் வசிக்கும் ரமேஷ் உட்பட 7 குடும்பத்தினர் செல்லும் பாதையை கம்பி வேலி கொண்டு அடைத்துள்ளார். ஆற்றங்கரையை ஒட்டி கம்பி வேலி கொண்டு அடைக்கப்பட்டு இருப்பதால் 7 குடும்பத்தில் வசிக்கும் 30க்கும் மேற்பட்டோர் வெளியே செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதில் குடிநீர் எடுத்து செல்லவும், குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தாங்கள் தலித் மக்கள் என்பதால் கம்பி வேலி கொண்டு அடைத்து தகாத வார்த்தைகள் பேசி வருவதாக சபாநாதன் மீது அப்பகுதி மக்கள் திருக்குவளை போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. வேலி அடைக்கப்பட்டுள்ள இடத்தில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu