புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
X

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (பைல் படம்).

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், புதிய கணக்கு தொடங்கிய சீமான், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதே போல் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளை மீறி அவர்கள் ட்விட்டரில் பதிவிடுவதாக மத்திய அரசு விடுத்த சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று அவர்களது கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். சீமானுக்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இவர்கள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்தது. இந்த நிலையில் செந்தமிழன் சீமான் (@NTKSeeman4TN) என்ற பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு ஒன்றை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி உள்ளார்.

மேலும் தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என பதிவிட்டு அவரை டேக் செய்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!