முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு:143 நாளில் தீர்ப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு:143 நாளில் தீர்ப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை
X

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாரிமுத்து மற்றும் ராமசுப்பு.


முறப்பநாடு வி.ஏ.ஓ கொலை வழக்கில் கைதான இருவருக்கும் 143 நாட்களில் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி புதுக்கோட்டையை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் சேவியர். இவர், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 25.04.2023 அன்று கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியில் இருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிந்த முறப்பநாடு போலீசார் இந்த வழக்கில் கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பு (38) மற்றும் மாரிமுத்து (31) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் புலன் விசாரணை செய்து சம்பவம் நடந்த 57 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் குற்றம்சாட்டப்பட்ட ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இருவருக்கும் இந்திய தண்டனைச்சட்டம் 302- பிரிவின்படி ஆயுள் தண்டனையும், ரூபாய் 2000 அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 449-இன் படி 5 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 1000 அபராதமும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 506(ii)-இன்படி ஒரு வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டு இன்று தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை சம்பவம் நிகழ்ந்து 57 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து 143 நாட்களில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜராகி வாதிட்டார்.

Tags

Next Story
ai solutions for small business