முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது -அமைச்சர் துரைமுருகன்
முல்லை பெரியாறு அணை பற்றி பத்திரிக்கையில் தவறான செய்தி வந்துள்ளது என்று கூறிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
முல்லை பெரியாறு அணை, 1886வது ஆண்டு அப்போதைய கேரளா அரசுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி தமிழ்நாட்டால் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு தொடர்ந்து இயக்கப்பட்டும் வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் காலம் 999 ஆண்டுகள். இதுகுறித்து உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 07.05.2014 அளித்த தீர்ப்பின்படி இந்த ஒப்பந்தம் இரு மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் என உறுதி செய்துள்ளது. இப்படியாக முல்லைப்பெரியாறு அணை, தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் தேவையில்லை. சில ஊடகங்களில் இன்று வந்துள்ள செய்திகளில், ஏதோ முல்லை பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது உண்மைக்கு புறம்பானதாகும்.
தமிழ்நாட்டின் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில், மழை அளவு, அணைக்கு வரும் நீர்வரத்து, வைகை அணைக்கு எடுத்துச் செல்லும் நீர் மற்றும் பருவநிலை மழை அளவுகளைக் கருத்தில் கொண்டு, அணையின் நீர்மட்டத்தை உச்சநீதிமன்ற ஆணையின்படி அதிகபட்சமாக 142 அடிவரை தேக்க தேவையான நடவடிக்கைகளை கண்காணித்து, முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் உச்சநீதி மன்றம், கேரள தனிநபர் ஒருவரால் தொடர்ந்த வழக்கில் 28.10.2021ல் அளித்துள்ள ஆணையில் மாதவாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அணையின் நீர்மட்ட அளவுகளின் படி அணையின் நீர் மட்டத்தை கண்காணிக்க ஆணையிட்டுள்ளது.
இதன்படி அணையின் நீர்மட்டத்தை கணக்கில் கொண்டு, 28.10.2021 காலை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்ததால் அணையின் இரண்டு மதகுகளை திறக்க, மதுரை மண்டலம் நீர்வளத்துறை முடிவெடுத்து, அன்று காலை தமிழக நீர்வளத்துறை பொறியாளர்களால் திறக்கப்பட்டது. இதுகுறித்து, நிலையான வழிகாட்டுதலின் படி கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. மதகுகள் திறக்கப்படும்போது கேரள மாநில மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சரும் மற்றும் சில அதிகாரிகளும் உடனிருந்து பார்வையிட்டார்கள்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க, ஏதோ கேரள அரசின் அதிகாரிகள் தான் அணை மதகுகளை திறந்தார்கள் என்று சில ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருப்பது மிகத்தவறானது. மேலும், நீர் வளத்துறை அமைச்சர், நேற்று 28.10.2021 அன்று பிற்பகல் அளித்த அறிக்கையில், அணையின் இரண்டு மதகுகளின் வழியாக வினாடிக்கு சுமார் 500 கன அடி நீர் காலை 7.30 மணிமுதல் வெளியேற்றுவது பற்றி அறிவித்து இருந்தார்கள்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.85 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3404 கன அடி குகை பாதை வழியாக வைகை அணைக்கு எடுத்துச் செல்லும் நீர் வினாடிக்கு 2340 கனஅடி மற்றும் வெளியேற்றப்படும் நீர் வினாடிக்கு 875 கனஅடி ஆகும். இந்த அளவுகள் நீரின் வரத்தைப் பொறுத்து மாறுபடும்.
சில ஊடகங்களில் முல்லைப்பெரியாறு அணையின் இயக்கத்தைப் பற்றி தவறான செய்தியை தெரிவித்திருப்பது ஏதோ உள்நோக்கமுள்ளதுபோல் தோன்றுகிறது. இது இரு மாநிலங்களின் நலன் கருதி தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் நீர்வளத் துறை, உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி மத்திய நீர்வளக் குழுமம் அதன் ஒப்புதலில் தெரிவித்த மாதவாரியான நிர்ணயிக்கப்பட்ட நீரின் அளவின்படி, அணையின் நீர்மட்டத்தை முறைப்படுத்தி வருகிறது. இதன்படி, நவம்பர் 30 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்ட 142 அடி அளவிற்கு அணையில் நீர்வரத்தை பொறுத்து நீர் தேக்கி வைக்கப்படும் என்ற உறுதிப்பாட்டில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. தமிழ்நாடு அரசு முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருகிறது என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu