ஆட்சியர் அலுவலகத்தில் எம்பி ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டம்
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் ஜோதிமணியை சமாதானப்படுத்தும் ஆட்சியர் பிரபு சங்கர்.
கரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்களை நடத்த கோரி மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை வலியுறுத்தியும் முகாம்களை நடத்தாத ஆட்சியரை கண்டித்து எம்.பி ஜோதிமணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்போது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், கரூர் மாவட்டத்தில் இந்த முகாம்கள் நடத்தாத காரணத்தால் திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதை தொடர்ந்து எம்பி. ஜோதிமணி, செய்தியாளரிடம் கூறுகையில், அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் இன்னும் உள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டினார். பலமுறை வலியுறுத்தியும் கரூர் ஆட்சியர் இந்த முகாமை நடத்த மறுத்துள்ளனர் என எம்பி ஜோதிமணி குற்றஞ்சாட்டினர்.
இதுதொடர்பாக ஆட்சியர் பிரபு சங்கர் கூறுகையில், மத்திய அரசின் மூலம் நடத்தப்படும் முகாம்கள் மாற்றுத்திறனாளிக்கான உபகரணங்கள் வழங்கும் முகாம் மட்டுமே. ஆனால், மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் உதவி உட்பட 10 விதமான சலுகைகளையும் வழங்கும் ஒருங்கிணைந்த முகாம் நடக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கி கடன் உதவி உள்ளிட்ட பத்து சேவைகள் வழங்கிட ஐந்து இடங்களில் இந்த முகாம் நடக்கிறது. இன்று நான்காவது முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் நாளை ஐந்தாவது முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமிற்கு பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu