சென்னை பொது அஞ்சலகத்தை சீரமைக்க தேசிய கலாச்சார அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னையின் 150 ஆண்டுகள் பழமையான பொது அஞ்சலகத்தை சீரமைக்க, அஞ்சல் துறை, சென்னை நகர மண்டலம், இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சென்னை பொது அஞ்சலகம் ஏப்ரல் 26, 1884 இல் வணிக செயல்பாட்டிற்கு வந்தது. இந்த கட்டிடம் ராபர்ட் சிஷோல்ம் என்பவரால் வடிவமைக்கப்பட்டது மற்றும் ரூ.6.8 லட்சம் செலவில் கட்ட 10 ஆண்டுகள் ஆனது. இது "நிலை-I - பாரம்பரிய கட்டிடம்" என நீதிபதி இ.பத்மநாபன் குழுவால் அறிவிக்கப்பட்டது.
இந்தப் பாரம்பரிய கட்டிடத்தை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் புது தில்லியில் உள்ள இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான அறக்கட்டளையுடன் பொது அஞ்சலக தலைமை தபால் அதிகாரி மூலம் அஞ்சல் துறை, சென்னை மண்டலம் 24.11.2023 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்னை பொது அஞ்சலக தலைமை தபால் அதிகாரி அமுதா, இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான அறக்கட்டளை சென்னை பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சுஜாதா சங்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வட்ட, அஞ்சல் துறை தலைவர் (அஞ்சல் மற்றும் வணிக மேம்பாடு) ஸ்ரீதேவி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன், தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை இயக்குனர் (தலைமையிடம்) ஆறுமுகம், சென்னை நகர மண்டல உதவி இயக்குநர் ஹேமலதா ஆகியோர் உடனிருந்தனர்.
புதுடெல்லி பொது அஞ்சலகம் , மும்பை பொது அஞ்சலகம் மற்றும் நாக்பூர் பொது அஞ்சலகம் - ஆகியவற்றின் மறுசீரமைப்பு பணிகளை இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான அறக்கட்டளை தற்போது மேற்கொண்டு வருகிறது. இது தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய கட்டமைப்பை புதுப்பிப்பதில் தொழில்முறை நிபுணத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu