மோர்தானா அணையில் இருந்து பாசன வசதிக்காக அமைச்சர் துரைமுருகன் தண்ணீர் திறந்து வைப்பு
மோர்தானா அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கும் அமைச்சர் துரைமுருகன்.
குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய அணையாகும், இந்த அணை குடியாத்தம் நகரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லையோரம் மோர்தானா கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த அணையின் உயரம் 11.50 மீட்டர். கடந்த 8 மாதங்களுக்கு மேலாக நிரம்பி உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 11.50 மீட்டரிலிருந்து 10 சென்டிமீட்டர் குறைவாக உள்ளது. விவசாயத்திற்கும் குடிநீருக்கும் மோர்தானா அணையை திறக்குமாறு சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மோர்தானா அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனையடுத்து மோர்தானா அணையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார், எம்.எல்.ஏ.க்கள் வி.அமலுவிஜயன், பி.கார்த்திகேயன், எம்.ஜெகன்மூர்த்தி, ஏ.சி.வில்வநாதன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கே.ரவிமனோகர், உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், பொதுப்பணித்துறை நீர்வளஆதார துறை செயற்பொறியாளர் ஆர்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் குணசீலன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு மோர்தானா அணையை திறந்து வைத்தார்.
கவுண்டன்ய மகாநதி ஆற்றின் இருபுறமும் உள்ள 15 கிராமங்கள், வலது மற்றும் இடதுபுற கால்வாயில் பாசனத்திற்கு பயனடையும் வகையில் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி வீதமும், இடது மற்றும் வலது கால்வாய்களில் தலா 75 கன அடி வீதமும் 10 நாட்களுக்கு விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் நிலத்தடி நீர் உயர்வதற்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன்மூலம் மோர்தானா அணையில் இருந்து 19 ஏரிகள் மூலமாகவும் மற்றும் நேரடி பாசனம் ஆகவும் 8,367 ஏக்கர் நிலங்களும், மோர்தானா, கொட்டாரமடுகு, ஜிட்டப்பல்லி, சேம்பள்ளி, ரங்கசமுத்திரம், சீவூர், செதுக்கரை, அம்மணாங்குப்பம், வேப்பூர், நேட்டேரி, பசுமாத்தூர், கீழ்ஆலத்தூர், காவனூர், மேலூர், கீழூர், கொத்தமங்கலம், வட விரிஞ்சிபுரம், உண்ணாமலைசமுத்திரம் சோழமூர், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், வஞ்சூர், விருதம்பட்டு, கழிஞ்சூர், அக்ராவரம், பெரும்பாடி, எர்த்தாங்கல், செருவங்கி, தாழையாத்தம், குடியாத்தம் நெல்லூர்பேட்டை, கீழாச்சூர் கந்தனேரி, கழனிபாக்கம், இறைவன்காடு, விரிஞ்சிபுரம், ஒக்கனாபுரம், செதுவாலை, பொய்கை, அன்பூண்டி, மேல்மொணவூர், கடப்பேரி, அப்துல்லாபுரம் சதுப்பேரி, கருகம்பத்தூர், கொணவட்டம், சேண்பாக்கம், வேலூர் தெற்கு, சிறுகாஞ்சி தொரப்பாடி ஆகிய 49 கிராமங்கள் பயன்பெறும்.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், மாவட்ட வன அலுவலர் பார்க்கவதேஜா, நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர்கள் கோபி, தமிழ்ச்செல்வன், தாசில்தார் வத்சலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரி, நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மோர்தானா அணையை திறந்து வைத்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தின் அடிப்படை உரிமையை மீட்கவே மேகதாது அணை கட்டுமானம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மேகதாது அணை குறித்து பேச உள்ளேன் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu