புதுச்சேரியில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி கலைக் கல்லூரியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவி படுகாயமடைந்ததை கண்டித்து, 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி கதிர்காமத்தில் இயங்கி வந்த இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்போது தற்காலிகமாக இந்திராநகர் அரசு பள்ளியில் இயங்கி வருகிறது.
இந்த கட்டிடம் பழுதடைந்துள்ளதாகவும், குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. மேலும் மின் நிறுத்தமும் அடிக்கடி ஏற்பட்டு வருவதாகவும், இந்த வளாகத்தில் செடிகொடிகள் படர்ந்துள்ளதால் பல்வேறு விஷ சந்துக்கள் வகுப்பறைக்கு வருவதாகவும்கல்லூரி முதல்வரிடம் ஏற்கனவே மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கல்லூரியில் மைக்ரோ பயாலஜி 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஹேமலதா நேற்று பிற்பகல் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது மழையின் காரணமாக மேற்கூரை இடிந்து மாணவி மீது விழுந்துள்ளது. இதில் மாணவியின் தோல்பட்டை மற்றும் காலில் பலத்த காயமடைந்தார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சக மாணவ, மாணவிகளின் உதவியோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியை விட்டு வெளியேறி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் ஊர்வலமாக வந்து புதுச்சேரி கதிர்காமம் வழுதாவூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கல்லூரிக்கென்று தனி கட்டிடம், அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தரப்படும். மேலும் அடுத்த 10 தினங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும்போது, அரசு பள்ளி கட்டிடத்தில் தற்காலிகமாக அரசு கல்லூரி இயங்கி வருவதாகவும், தங்களுக்கு நிரந்தர கல்லூரி கட்டிடம் வேண்டும், அடிப்படை வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும், மாணவர்களின் உயிரில் விளையாடக் கூடாது எனக் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu