இந்திய ராணுவத்தில் குரோம்பேட்டை எம்.ஐ.டி. வடிவமைத்த டிரோன்கள்
பைல் படம்.
சென்னை குரோம் பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் எம்.ஐ.டி. மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கும் முனைவர் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையம் உருவாக்கிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட டிரோன் எனப்படும் 500 ஆளில்லா விமானங்களை இந்திய ராணுவம் பயன்படுத்த தொடங்கியது.
நாட்டின் வட கிழக்கு மாநிலங்களின் எல்லை பகுதிகள் மற்றும் மலை பகுதிகளில் எளிதாக அணுக முடியாத இடங்களில் இந்த டிரோன்களை இந்திய ராணுவம் பயன்படுத்துகிறது.
கடந்த வாரம் மத்திய மந்திரி அமித்ஷா, உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரமான டேராடூனில் இந்தோ திபெத் எல்லை காவல் படையின் 62-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, இந்த டிரோன் வடிவமைத்த குழுவை பாராட்டினார்.
மேலும் அவர் பேசும் போது எல்லை கண்காணிப்பு நிலையங்களில் மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உதவும் என்று கூறினார்.
இந்த ஆளில்லா விமானங்கள் கடும் பனி, மழை மற்றும் வேகமான காற்று வீசும் போது கூட பயன்படுத்த முடியும். ஒரு கிலோமீட்டர் உயரம் வரை சென்று பறக்கக்கூடிய இந்த டிரோன்கள், ஒரு சுற்றில் சுமார் 20 கிலோமீட்டர் வரை இயக்க முடியும். ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இந்த குழு, வழிசெலுத்தல் எனும் தொழில்நுட்பம் மூலம் இந்த விமானங்களை இயக்குவது சிறப்பு அம்சமாகும்.
இந்த ஆளில்லா விமானங்களின் எடை சுமார் 100 கிலோ. இவை 15 முதல் 20 கிலோ மருந்துகள், உணவு பொருட்கள், எண்ணெய் போன்ற பொருட்களை ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு எடுத்து செல்லும் திறன் கொண்டவையாகும்.
அருகாமையில் இருக்கும் சென்சார் மூலம் சுலபமாக தரைக்கு திரும்ப இந்த விமானங்களை இயக்க முடியும். தரையில் திரும்பி வந்த உடன் சில நிமிடங்களிலேயே ஆர்மிங் சுவிட்ஸ் எனும் கருவி தயார் நிலைக்கு வந்த உடன், இந்த ஆளில்லா விமானத்தை மறுபடியும் இயக்க வைக்க முடியும். உயர்ந்த மலை பகுதிகள், அடர்ந்த காடுகள், வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மலை பகுதிகள் மற்றும் வெப்பம் அதிகமாக உள்ள பொக்ரானில் இந்த ஆளில்லா விமானிகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்த ஆளில்லா விமானங்கள் அவசர அறுவை சிகிச்சைக்காகவும், உடல் உறுப்புகள் மற்றும் அறிய வகை ரத்தம் மற்றும் குருதித்திரவவிழையம் விரைவாக எடுத்து செல்லவும் இந்த மையம் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu