அனைவரும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் வலியுறுத்தல்
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
அனைவரும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற சக்ஷம் 2022 எனும் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் நிறைவு விழாவில், தலைமை வகித்து பேசிய அவர், எண்ணெய் என்பது நேரத்தைப் போன்றது. ஒரு முறை பயன்படுத்திய பின் திரும்பவும் கிடைக்காது என்றார். சீரான ஆற்றல் மிக்க வருங்காலத்தைப் பெற இந்த எண்ணத்தை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநரும் தென் மண்டல எண்ணெய் துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளருமான . பி.ஜெயதேவன், எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கனம் குறித்த விழிப்புணர்வு என்பது நம்மிடம் உள்ள ஆதார வளங்களை சிறப்பு கவனத்துடன் செயல்திறன் மிக்க முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும் என்றார். இதனால் எரிசக்தி வீணாவது குறைதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சாதனை மைலேஜூடன் எரிபொருள் சிக்கனத்தைப் பின்பற்றிய சிறந்த மாநில போக்குவரத்து பணிமனைகளுக்கு விருதுகளையும் ரொக்கப் பரிசுகளையும் போக்குவரத்து துறை அமைச்சர் வழங்கினார். மேலும், எரிபொருள் சிக்கனம் என்ற கருப்பொருளில் எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பெட்ரோலிய சேமிப்பு மற்றும் ஆய்வு அமைப்பு நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி / கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (மண்டல சேவைகள்) கே. சைலேந்த்ரா, பிசிஆர்ஏ-வின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏ எம் சந்தோஷ் குமார் உள்ளிட்டோர், கலந்து கொண்டனர். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல தகவல் தொடர்பு தலைமை பொது மேலாளர் வி. வெற்றி செல்வ குமார், வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu