அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்தில் அடைப்பு: அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை

அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்தில் அடைப்பு: அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை
X

அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதய ரத்த குழாயில் அடைப்பு கண்டறியப்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

கரூர் மற்றும் சென்னையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் கைது செய்யப்பட்டதாகத் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று நள்ளிரவு வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று அதிகாலை அவரை கைது செய்தனர். அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட இசிஜி நிலையாக இல்லாத காரணத்தால் இதயத்தில் அடைப்பு இருக்கிறதா என கண்டறிய ஆஞ்சியோகிராம்(இருதய ரத்த நாள பரிசோதனை) செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்


அதன்படி, செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்ததில் அவரின் இதய ரத்த குழாயில் மூன்று முக்கிய இடங்களில் அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைதைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கோவையில் நாளை மறுநாள் 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story