பாரதி நூற்றாண்டு தொடர் நிகழ்ச்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில், பாரதி நூற்றாண்டு தொடர் நிகழ்ச்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் இன்று (04.12.2021), பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமைகளை புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டில் 14 முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்க. அதில், பாரதி நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு சென்னை பாரதி நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித் துறையினரால் நடத்தப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் இன்று தொடர் நிகழ்ச்சிகளை செய்தித் துறை அமைச்சர் தொடங்கி வைத்து பேசியதாவது:
" தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளவாறு மகாகவியின் புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை கோட்டையில் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய போது, மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன். தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிலைக்கெல்லாம் மலர் மாலை அணிவித்திட வேண்டும் என்று சொல்லி செய்தித்துறைக்கு உத்திரவிடப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது. அந்த வகையில் பெரும்புலவன் பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை தொடங்கி வைப்பதில் நான் பெருமையடைகிறேன்.
தேசப் பற்று, தெய்வப் பற்று, தமிழ்ப் பற்று, மானுடப் பற்று ஆகிய நான்கும் கலந்தவர் தான் மகாகவி பாரதியார் அவர்கள். நாட்டு விடுதலைக்காகப் போராடியவராக மட்டுமே இருந்திருந்தால் அதற்காக மட்டுமே அவர் நினைவு கூறப்பட்டிருப்பார். அதையும் தாண்டி சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் எழுதியதால்தான் பாரதியார் கவிதை வரிகளாய் உலவி வருகிறார்.
பாரதியார் குறைந்த வயதில் துர்பாக்கிய வசமாக காலமானார். அவர் இன்னும் சில காலம் உயிரோடு இருந்திருந்தால் மக்களுக்கு வழிகாட்டியாக இருந்திருப்பார். அவர் வாழ்ந்த இந்தக் காலத்தில் இந்த மண்ணுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் அவருடைய கவிதைகள் விளங்குகிறது. அந்தளவிற்கு அவர் தன்னுடைய வாழ்க்கையை பதிவு செய்துவிட்டு மறைந்துள்ளார். மனதை உற்சாகப்படுத்துகின்ற அவரது பாடல் வரிகள் நம்முடைய வாழ்க்கையில்
ஒரு உந்துதலை ஏற்படுத்தும் வகையில் மனதில் உறுதி வேண்டும்; வாக்கினலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்; நெருங்கின பொருட்கள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும் போன்ற செய்திகளை ஆணித்தரமாக இந்த மக்களுக்கு எடுத்துரைத்தார். இந்த மண் உள்ளவரை, மனிதன் உள்ளவரை அவருடைய இந்தக் கவிதை நிலைக்கும். விடுதலைப் போரட்டத்திற்காக அவர் கொடுத்த குரல் இன்றைக்கு விடியலை ஏற்படுத்தியுள்ளது. ஓங்கி ஒலிக்கிறது.
மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எத்தலப்ப நாயக்கர் இந்த தாய் மண்ணைக் காப்பற்றுவதற்கு எத்தனை தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கு நினைவரங்கம், திருவுருவச் சிலை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகள் மற்றும் பெண்தியாகிகளை நினைவு கூரும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புகைப்படக் கண்காட்சி தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. பண்டிகைக் காலத்தில் வெளியூர் சென்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் அக்கண்காட்சியை கண்டது மகிழ்ச்சியை அளிக்கின்றது. நம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு தங்களது இன்னுயிரை நீத்தவர்களை போற்றக் கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களைப் போலவே தமிழ்நாட்டில் இன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விடுதலைப்போரட்ட வீரர்களுக்கும், தமிழ்மொழி காத்த தியாகிகளுக்கும், திருவுருவச் சிலையும் மற்றும் நினைவு மண்டபமும் அமைக்க உத்தரவிட்டுள்ளார்கள்" என்று உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார் உரையாற்றியபோது, 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற புலவன் மகாகவி பாரதி என்றும், அவரது நினைவு நூற்றாண்டினை தமிழக அரசு கொண்டாடுவது பாராட்டுக்குரியது என்று தெரிவித்து, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
"பாரதி மரணமடைந்தார். இறந்தார் என்று நாம் குறிப்பிடுவதில்லை . காலமானார் என்றுதான் குறிப்பிடுகின்றோம். ஏனென்றால் இறந்த காலம், நிகழ் காலம், வரும் காலம் அனைத்திலும் அவர் வாழ்கின்றார். அதனால் தான் அவர் காலமானார் என்று குறிப்பிடுகிறோம். ஒப்பற்ற 14 திட்டங்களை எந்த அரசும் அறிவித்ததில்லை . எந்த கவிஞருக்கும் இந்த பெருமை கிடைத்ததில்லை . பாரதி சமூக விடுதலைக்காகவும், சுதந்திர விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும், ஞான விடுதலைக்காகவும் போராடிய காரணத்தினால் தான் நுற்றாண்டுக்குப் பிறகும் பாரதி கொண்டாடப்படுகிறார்" என தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி உட்பட பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் வரவேற்றுப் பேசினார். செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் தி.அம்பலவாணன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கள இசை மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu