சட்டவிரோதமான வெளிநாட்டு லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை.. அமைச்சர் கணேசன் அறிவிப்பு…

சட்டவிரோதமான வெளிநாட்டு லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை.. அமைச்சர் கணேசன் அறிவிப்பு…
X

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியக் கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசினார்.

தமிழகத்தில் சட்டவிரோதமான வெளிநாட்டு லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தின் முதலாவது வாரியக் கூட்டம் சென்னை, தேனாம்பேட்டை, தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசியதாவது:

தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி. திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலேயே விருதுநகர் மாவட்டத்தில் தான் அதிகளவில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும்போது எதிர்பாரா விதமாக ஏற்படும் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு உதவித் தொகை மற்றும் ஈமச்சடங்கு செலவினம் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தில் 28.02.2023 வரை 61.141 தொழிலாளர்கள் பதிவு பெற்றுள்ளனர். மேலும், 4.724 தொழிலாளர்களுக்கு ரூ.2,19,38,950 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்று சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் மீது பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் சிறப்பு குழுக்கள் அமைத்து பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

வாரியக் கூட்டத்தில், கடந்த 04.02.2023 அன்று தமிழ்நாடு முதல்வரிடம் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கங்கள் தங்கள் பங்களிப்பாக வழங்கப்பட்ட ரூ. 5.02 கோடியை கொண்டு நிரந்தர ஆதார நிதி உருவாக்கப்பட்டதற்கும். வாரியத்திற்கென திட்டக் கூறுகள் வகுக்கப்பட்டதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும், வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ. 1,000 வழங்கும் புதிய கல்வி நல உதவி திட்டம் ஏற்படுத்தியதற்கும், வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடையும் நேர்வில் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட நல உதவித் தொகையை ரூ.20,000 -இவ் இருந்து ரூ. 30,000 ஆக உயர்த்தியதற்கும், விபத்தில் மரணமடையும் நேர்வில் வழங்கப்பட்டு வந்த நலஉதவித் தொகையை ஒரு லட்சத்தில் இருந்து 1.25 லட்சம் ரூபாயாக உயர்த்தியதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நஜிமுதீன், முதன்மைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரதுறை இயக்குநர் செந்தில்குமார், நிதித்துறை துணைச் செயலாளர் ராமநாதன், தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலையளிப்போர் தரப்பு பிரதிநிதிகள், தொழிலாளர் துறை அலுவலர்கள் மற்றும் வாரிய செயலாளர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்